கர்நாடகா தேர்தல்: காங். ஆதரவு பிரசாரத்துக்கு போகும் 'சீட்டா' திருமாவளவன்! அந்த 2 சீட் கிடைக்குமா?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட வேண்டும் என்ற திருமாவளவன் கனவை காங்கிரஸ் நிறைவேற்றுமா? என்பது அக்கட்சியினரின் எதிர்பார்ப்பு.
224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் மே 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
224 இடங்களைக் கொன்ட கர்நாடகா சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 113 எம்.எல்.ஏக்கள். 2018 சட்டசபை தேர்தலில் பாஜக அதிகபட்சமாக 108 இடங்களைத்தான் பெற முடிந்தது. இதனால் தொங்கு சட்டசபை உருவானது. பின்னர் காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு ஆட்சியை கவிழ்த்து அரியாசன்ம் ஏறியது பாஜக.

இதனால் இம்முறை ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பதில் தீவிரமாக உள்ளன. இரு கட்சிகளுமே தேர்தல் பிரசாரங்கள், யாத்திரைகள் என படுபிஸியாக களத்தில் நிற்கின்றன. மேலும் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் நீண்ட இழுபறிக்கும் உட்கட்சி பஞ்சாயத்துகளுக்கும் இடையேதான் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இம்முறை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னரே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு திரும்பிப் பார்க்க வைத்தது காங்கிரஸ்.
இதனிடையே கர்நாடகாவில் கணிசமான தமிழ் வாக்காளர்களிடையே பிரசாரம் செய்வதற்காக பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தமிழ்நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. பாஜகவில் கர்நாடகா தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியானது திமுக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் பிரசாரத்துக்கு அழைப்பு விடுக்க தொடங்கி இருக்கிறது.

இந்த பட்டியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கும் கர்நாடகா காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. தமிழர் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக திருமாவளவனுக்கு கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவகுமார் அழைப்பு விடுத்திருக்கிறார் என்பதை அக்கட்சி தலைமை நிர்வாகிகள் உறுதி செய்திருக்கின்றனர்.
அதேநேரத்தில் காங்கிரஸுடன் மிக நெருக்கமாக இருக்கும் திருமாவளவன், கர்நாடகா தேர்தலில் எப்படியும் 2 தொகுதிகளில் விசிகவை போட்டியிட வைப்பது என்பதிலும் காய்நகர்த்திக் கொண்டே இருக்கிறார். கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை சந்தித்தும் பேசினார். கர்நாடகா தேர்தல் குறித்துதான் சித்தராமையாவிடம் தாம் பேசியதாகவே திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார்.
கர்நாடகா தேர்தல் பிரசாரத்துக்கு செல்லப் போகும் திருமாவளவன் அதற்கு முன்பாக 2 சீட்டுகளைப் பெற்றுவிட்டால் படுகெத்தாக கர்நாடகாவில் வலம் வர முடியும் என கணக்குப் போடுகிறாராம். திருமாவளவனின் கனவை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றத் தருமா? என்பது அக்கட்சியினரின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications