கர்நாடகா: பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தும் 3 சிட்டிங் எம்பிக்களை தூக்கி எறிய பாஜக முடிவு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக எளிதாக வெல்லும் வாய்ப்புள்ள தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மற்றும் உடுப்பி சிக்மகளூர் ஆகிய லோக்சபா தொகுதிகளில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்ட 3 சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தருவதில்லை என பாஜக மேலிடம் திட்டவட்டமாக முடிவு செய்துள்ளதாம்.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளைக் கைப்பற்றியது. தென்னிந்தியாவில் பாஜக அதிகமான இடங்களைக் கைப்பற்றிய ஒரே மாநிலம் கர்நாடகாதான். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 17 இடங்களில் வென்றிருந்தது பாஜக.

Karnataka: BJP to deny tickets to 3 sitting MPs in party strongholds?

ஆனால் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 20க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்ல முடியாது என்கின்றன கருத்து கணிப்புகள். அதே நேரத்தில் கர்நாடகாவில் பாஜக நிச்சயமாக வெல்லக் கூடிய தொகுதிகள், அதாவது பாஜகவுக்கு 50% முதல் 75% வாக்குகள் உள்ள தொகுதிகளை எளிதாக கைப்பற்றுவதற்கான வியூகத்தையும் தற்போது கையில் எடுத்துள்ளது.

தட்சிண கன்னடா : தட்சிண கன்னடா லோக்சபா தொகுதியில் 2009-ம் ஆண்டு முதல் பாஜகவின் நளின் குமார் கட்டீல் எம்பியாக இருந்து வருகிறார். கர்நாடகா மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்தவர் நளின் குமார் கட்டீல். கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால் நளின் குமார் கட்டீல் தமது பதவியை ராஜினாமா செய்தார். 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பாஜக சராசரியாக 50% வாக்குகளைப் பெற்ற தொகுதி தட்சிண கன்னடா. 2009-ம் ஆண்டு தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்திலும் 2014-ம் ஆண்டு தேர்தலில் 1.43 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் அதி உச்சமாக 2019-ம் ஆண்டு 2.74 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றவர் நளின் குமார் கட்டீல். இந்த லோக்சபா தொகுதிக்குட்பட்ட 8 சட்டசபை தொகுதிகளி 2023 தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜக வென்றது.

கொலையால் சரிவை சந்தித்த நளின் கட்டீல்: தட்சிண கன்னடா லோக்சபா தொகுதியில் உச்சகட்ட வெற்றி கொடியை பறக்கவிட்ட நளின் குமார் கட்டீலுக்கு பாஜவின் இளைஞர் அணியை சேர்ந்த பிரவீன்குமார் நெட்டாரு கொலை பெரும் தலைவலியானது. இந்த கொலை சம்பவத்தில் பாஜகவினரே நளின் குமார் கட்டீல் மீது கோபத்தை காட்டினர். இதனால் இத்தனை ஆண்டுகாலம் தாம் சேர்த்து வைத்த பெரும் ஆதரவை நளின் குமார் கட்டீல் இழக்க தொடங்கிவிட்டார். இந்த கொலை சம்பவமானது பாஜகவினரிடையே ஜாதிய பிளவையும் கூர்மைப்படுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. நளின் குமார் கட்டீல் ஆதிக்கம் செலுத்தக் கூடிய Bunt ஜாதியை சேர்ந்தவர்; படுகொலை செய்யப்பட்ட பிரவீன்குமார் நெட்டாரு உள்ளிட்ட பெரும்பான்மை பாஜக தொண்டர்கள் Billava ஜாதியை சேர்ந்தவர்கள். ஜாதிய அடிப்படையிலும் பாஜக இப்போது பிளவுபட்டு நிற்கிறது. இதனால் நளின்குமார் கட்டீலுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என்கின்றன பாஜக வட்டாரங்கள். அதே நேரத்தில் தற்போது மத்திய அமைச்சர்களாக இருக்கிற ராஜ்யசபா எம்பிக்களான நிர்மலா சீதாராமன் அல்லது ஜெய்சங்கர் ஆகியோரில் ஒருவரை இத்தொகுதியில் நிறுத்துவதற்கு பாஜக மேலிடம் விரும்புகிறதாம். உடுப்பி சிக்மகளூர் தொகுதியில் சீட் மறுக்கப்பட்டால் மற்றொரு மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூட இத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

உத்தர கன்னடா: கர்நாடகாவில் பாஜக மிக வலிமையாக இருக்கும் மற்றொரு தொகுதி உத்தர கன்னடா. இத்தொகுதியிலும் 2004-ம் ஆண்டு முதல் தற்போது வரை பாஜகவின் அனந்தகுமார் ஹெக்டேதான் எம்பியாக இருக்கிறார். முன்னதாக 1996, 1998-லும் அனந்தகுமார் ஹெக்டே இத்தொகுதியில் வென்றார். மொத்தம் 5 முறை உத்தர கன்னடா லோக்சபா தொகுதி எம்பி அனந்தகுமார் ஹெக்டே. உத்தர கன்னடா தொகுதியில் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 68.15% வாக்குகளை அள்ளியது. காங்கிரஸ் கூட்டணியில் ஜேடிஎஸ் போட்டியிட்டு 26.56% வாக்குகளைப் பெற்றது. தற்போது ஜேடிஎஸ், பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. 2014 தேர்தலில் பாஜக 54.64% வாக்குகளையும் காங்கிரஸ் 40.58% வாக்குகளையும் இத்தொகுதியில் பெற்றிருந்தன. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் அனந்தகுமார் ஹெக்டே மாநிலத்திலேயே மிக அதிக அளவில் 4,79,649 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி இது.

அனந்தகுமார் ஹெக்டேவுக்கு சான்ஸ் இல்லை: 1996-ம் ஆண்டு 28 வயதில் லோக்சபா தொகுதி எம்பியாக அரசியல் களத்தில் அதகளமாக ஆடிய அனந்தகுமார் ஹெக்டே உடல்நலன் பாதிப்புகளால் கடந்த 3 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகியே நிற்கிறார். உத்தர கன்னடா லோக்சபா தொகுதிக்குட்பட்ட 8 சட்டசபை தொகுதிகளில் 2023 தேர்தலில் காங்கிரஸ் 5 இடங்களில் வென்றது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து மீண்டும் லைம் லைட்டுக்குள் நுழைய முயற்சிக்கிறார். ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக உத்தர கன்னட தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் தேக்க நிலையே இருக்கிறதாம். இது வாக்காளர்களிடையே மட்டுமல்ல பாஜகவினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். என்னதான் டெல்லி மேலிடத்திடம் நல்ல பெயர் எடுத்தாலும் களநிலவரம் அனந்த குமார் ஹெக்டேவுக்கு சாதகமாக இல்லை என்பதால் அடுத்த பாஜக 'தலை'கள் தொகுதியை குறிவைத்து களமிறங்கிவிட்டன. முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே, சுலிபெலே சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலர் உத்தர கன்னடா தொகுதியில் களப்பணிகளையே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராஜ்யசபா எம்பிக்களாக இருக்கும் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன் அல்லது ஜெய்சங்கர் ஆகியோரில் ஒருவருக்கு இத்தொகுதி கொடுக்கப்படவும் சாத்தியம் இருக்கிறதாம்.

உடுப்பி சிக்மகளூர்: கர்நாடகாவில் பாஜக மிக மிக வலிமையாக உள்ள மற்றொரு தொகுதி உடுப்பி சிக்மகளூர் தொகுதி. 2009-ல் சதானந்த கவுடா (அப்போது காங்கிரஸ் தற்போது பாஜக), 2012-ல் ஜெயபிரகாஷ் ஹெக்டே (காங்கிரஸ்), 2014,19-ல் தற்போதைய மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே எம்பிக்களாக வென்ற தொகுதி. 2019 லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சர் ஷோபா, 3,49,599 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 2014-ல் 1,81,643 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார் ஷோபா கரந்த்லாஜே. இப்போது ஷோபாவுக்கு சிக்கலாக இருப்பது பாஜகதான். 2019-ம் ஆண்டு தேர்தலில் 3,49,599 வாக்குகள் வித்தியாசத்தில் ஷோபா தோற்கடித்த ஜேடிஎஸ் கட்சியின் பிரமோத் மத்வராஜ், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். 2023 தேர்தலில் உடுப்பி சிக்மளூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கணிசமான இடங்களை கைப்பற்றியது. இதனால் இம்முறை மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு சீட் மறுக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளதாம். அவருக்கு பதிலாக ஷோபாவால் தோற்கடிக்கப்பட்ட பிரமோத் மத்வராஜ் அல்லது பாஜகவின் சீனியர் முகமான சிடி ரவி ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்குமாம். அதேநேரத்தில் எடியூரப்பாவுக்கு நெருக்கமான ஷோபா, இத்தொகுதி கிடைக்காமல் போனால் வேறு ஒரு தொகுதியை போராடியாவது பெறுவார் எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+