பத்திரிக்கையாளர்களுக்கு கர்நாடக முதல்வர் ஆபீஸ் கொடுத்த தீபாவளி பரிசு! கவரில் கட்டுகட்டாக ரூ.3 லட்சம்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் அலுவலகம் சார்பில் தீபாவளி பரிசாக பத்திரிகையாளர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. இதில் பல பத்திரிகையாளர்கள் பணத்தை திரும்ப கொடுத்த நிலையில் முதல்வர் அலுவலகத்தை கடிந்து கொண்டனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். அடுத்த ஆண்டில் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது.
அதேபோல் பாஜகவை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனால் கர்நாடகாவில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தீபாவளி கொண்டாட்டம்
இந்நிலையில் தான் தீபாவளி பண்டிகையை வைத்து கர்நாடக முதல் அமைச்சகம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது இந்தியாவில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதேபோல் பல மாநிலங்களில் தீபாவளி 3 நாட்கள் வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தீபாவளி கொண்டாடப்பட்டது.

கர்நாடகா தீபாவளி
கர்நாடகாவிலும் தீபாவளி 3 நாட்கள் வரை கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் திங்கட்கிழமை தீபாவளி கொண்டாடிய நிலையில் கர்நாடகாவில் தீபாவளிக்கு அக்டோபர் 26ம் தேதி(புதன்கிழமை) அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. புதன்கிழமை தான் ஏராளமானவர்கள் கர்நாடகாவில் தீபாவளி கொண்டாடினர்.

ரூ.3 லட்சம் வரை பரிசு
இந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது கர்நாடக மாநில முதல்வர் அலுவலகம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்புடன் பணம் வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. பத்திரிகைகளின் பிரபலத்தை பொறுத்து இந்த பரிசுத்தொகை அமைந்துள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம், ரூ.3 லட்சம் வரை தீபாவளி பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு சென்ற பரிசு
ஒரு பத்திரிகையில் உள்ள அரசியல் பிரிவு நிருபர், பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சில பத்திரிகையாளர்களின் வீடுகளுக்கு பரிசுத்தொகை சென்றதாக சொல்லப்படுகிறது. இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் இந்த பரிசை பலர் வாங்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளனர். இருப்பினும் கர்நாடக முதல்வர் அலுவலகம் எத்தனை பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்தனர். எவ்வளவு பேர் பணத்தை திருப்பி வழங்கினர் என்பது பற்றிய விபரங்கள் தெரியவில்லை.

கடிந்து கொண்ட பத்திரிகையாளர்கள்
பரிசை திருப்பி வழங்கிய பத்திரிகையாளர்கள் இது மோசமான செயல். இது லஞ்சம் கொடுப்பது போன்றதாகும். இதனை எதிர்காலத்தில் செய்யாதீர்கள் என கடிந்து கொண்டுள்ளனர். இதுதொடர்பாக கோபத்துடன் பலர் முதல்வர் அலுவலகத்துக்கு மெயில் அனுப்பி உள்ளனர். இதற்கு தற்போது வரை கர்நாடக முதல்வர் அலுவலகம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

காங்கிரஸ் ட்விட்
கர்நாடகா முதல்வர் அலுவலகம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு இருப்பதை கர்நாடக காங்கிரஸ் கட்சியும் கடுமையாக கண்டித்துள்ளது. இதுபற்றி கர்நாடகா காங்கிரஸ் கட்சின தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‛‛முதல்வர் அலுவலம் கொடுத்த ரூ.2.50 லட்சம் லஞ்சத்தை திருப்பி கொடுத்ததன் மூலம் கர்நாடகாவில் பத்திரிகை தர்மம் உயிர்ப்புடன் வைத்துள்ளனர். மேலும் கர்நாடக பத்திரிகையாளர்கள் ஒருபோதும் பத்திரிகை தர்மத்தை மீறமாட்டார்கள் என்பதற்கு சான்றாக இந்த சம்பவம் உள்ளது. பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது பற்றி முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கம் அளிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

தொடரும் சர்ச்சை
கர்நாடகாவில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. 40 சதவீத கமிஷன் பெற்று கர்நாடக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என தொடர்ந்து காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் PayCM என்ற பெயரில் க்யூஆர் கோடுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டோவுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டனர். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் தான் பத்திரிகையாளர்களுக்கு பணம் வழங்கிய விஷயம் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனையும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

முந்தைய சர்ச்சை
முன்னதாக, அண்ணாமலை தலைவரான பிறகு, தமிழ்நாட்டில் பாஜக சார்பில் பத்திரிகையாளர்களுக்கு சாம்சங் செல்போன் வழங்கியதாக ஒரு பிரபல பெண் பத்திரிக்கையாளர் பொதுவெளியில் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில்தான் தற்போது கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அலுவலகம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications