ஒரே மாதத்தில் 20 பேர் மாரடைப்பால் பலி! கர்நாடகாவில் ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து ஷாக்! கொரோனா தடுப்பூசி காரணமா?
பெங்களூர்: கர்நாடகாவில் இளைஞர்களிடையே, திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹாசன் மாவட்டத்தில் குறைந்தது 20 பேர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு இணை நோய்களும் எதுவும் இல்லை.. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து 10 நாட்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இளைஞர்களிடையே கடந்த சில காலமாகவே மாரடைப்பு அதிகரித்து வருகிறது. இயல்பாக இருக்கும் பலரும் திடீரென உயிரிழக்கும் சம்பவம் நமக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இதற்கிடையே நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹாசன் மாவட்டத்தில் குறைந்தது 20 பேர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது.

கர்நாடக முதல்வர்
பெரும்பாலும் இளைஞர்களே இதுபோன்ற மாரடைப்புகளால் உயிரிழந்துள்ளனர். அதுவும் அவர்களுக்கு இணை நோய் அல்லது வேறு அறிகுறிகள் எதுவுமே இல்லையாம்.. கர்நாடக மக்களிடையே இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அடுத்து 10 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணையை ஜெயதேவா இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்டியோவாஸ்குலர் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் (Jayadeva Institute of Cardiovascular Sciences and Research) இயக்குநர் டாக்டர் கே.எஸ். ரவீந்திரநாத் தலைமையில் நடைபெறுகிறது. அவர் ஹாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் உடன் இணைந்து, திடீர் மாரடைப்பு மற்றும் மரணங்களுக்கான காரணங்கள், இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்.
30 வயதுக்கு கீழானவர்கள்
இது குறித்து ஹாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் இயக்குநர் டாக்டர் ராஜண்ணா பி கூறுகையில், "இறந்தவர்களில் 14 பேர் மருத்துவ உதவி பெறாமல் வீட்டிலேயே இறந்துவிட்டனர். மேலும், உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள்.. இந்த மரணங்கள் மே 28 முதல் ஜூன் 28 வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ளது" என்றார்.
இதில் பல மரணங்கள் நிகழ்ந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், உடற்கூறு ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளூர் மருத்துவர்கள், குடும்பத்தினர், மருத்துவப் பதிவுகளை வைத்தே விசாரணை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் நடந்த இந்த திடீர் மரணங்கள் மாநிலம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. பெங்களூர் மற்றும் மைசூரில் உள்ள ஜெயதேவா மருத்துவமனைகளில் அவசர இதயச் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கும் மாரடைப்புக்குத் தொடர்பு இருக்குமா?
மாரடைப்பு மரணங்கள் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில மரணங்களுக்குக் கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறை அவர் நிராகரிக்கவில்லை. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "தடுப்பூசியை அவசர அவசரமாக அங்கீகரித்து விநியோகம் செய்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நாம் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் சர்வதேச ஆய்வுகள் கொரோனா தடுப்பூசிக்கும் இதயப் பிரச்சினைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றன
தடுப்பூசிக்குப் பிந்தைய விளைவுகள் மற்றும் இளைஞர்களின் மரணங்கள் குறித்து ஆய்வு செய்யப் பிப்ரவரியில் இதே நிபுணர் குழுவிடம் கேட்டிருந்தோம். இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளை பாஜக விமர்சிப்பதற்கு முன்பு, அவர்கள் தங்கள் மனசாட்சியிடம் கேட்க வேண்டும்.. எதிர்க்கட்சித் தலைவர்கள் பொதுச் சுகாதாரப் பிரச்சினையை அரசியலாக்க முயல்கிறார்கள்" என்றார்.
வல்லுநர்கள் சொல்வது என்ன
மருத்துவர்கள் இந்த விஷயத்தில் இருவேறு கருத்துகளைக் கூறியுள்ளனர். இந்திய கார்டியலாஜிக்கல் சொசைட்டியின் (CSI) மைசூர் பிரிவின் டாக்டர் சஷிரேகா மற்றும் டாக்டர் வீணா நஞ்சப்பா தலைமையில் குழு இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து இரண்டு வருட ஆய்வைத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், மூத்த இதயநோய் மருத்துவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.என். மஞ்சுநாத் இதுபோல நடப்பது புதிது இல்லை என்கிறார்.
டாக்டர் மஞ்சுநாத் மேலும் கூறுகையில், "இது திடீரென ஏற்படும் நிகழ்வு அல்ல. 2013-2018ஆம் ஆண்டில் 20-45 வயதுடைய 5,000 மாரடைப்பு நோயாளிகளை ஆய்வு செய்தோம். அதில் 50% பேர் புகை பிடிப்பவர்களாகவும், சுமார் 20% பேருக்கு நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தம் இருந்தது. ஆனால் கவலை அளிக்கும் விதமாக, 25% பேருக்கு எந்தவிதமான காரணிகளும் இல்லை. எனவே, உணவு முறைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு குறித்தே நாம் ஆராய வேண்டும்" என்று தெரிவித்தார்.
கர்நாடக அரசு அறிவுறுத்தல்
அதேநேரம் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் துளியும் தாமதம் இல்லாமல் மருத்துவ உதவியைப் பெறுமாறு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், "மார்பு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.. அதிகரித்து வரும் இதய நோய் அபாயத்தைக் கண்காணிக்கவும், அதற்குச் சிகிச்சை அளிக்கவும் கர்நாடக அரசு "ஹிருதய ஜோதி" மற்றும் "கிரஹ ஆரோக்கிய" போன்ற சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது" என்றார்.
இளைஞர்களிடையே திடீரென அதிகரித்துள்ள மாரடைப்பு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள வல்லுநர் குழு, வரும் ஜூலை 10ம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications