அரசியலில் பெரிய ஆளா வருவீங்க! கணித்த ஜோதிடரை விரட்டியடித்த சித்தராமையா! ட்விஸ்ட்டால் செம ‛கிப்ட்’
பெங்களூர்: கர்நாடாகா முதல்வராக சித்தராமையா இன்று 2வது முறையாக பதவியேற்றார். இந்நிலையில் தான் 1979ம் ஆண்டிலேயே அரசியலில் பெரிய ஆளாக வருவீர்கள் என எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர் கூறியபோது சித்தராமையா அவரை விரட்டியடித்ததும், அதன்பிறகு எதார்த்தமாக நடந்த சந்திப்பில் அந்த ஜோதிடருக்கு ‛கிப்ட்' கொடுத்த சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மாநிலத்தில் ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த அமோக வெற்றியை பெற்றது.

இந்த தேர்தலில் பாஜக வெறும் 66 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 19 தொகுதிகளிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர். இந்நிலையில் தான் கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்றார்.
சித்தராமயைா கடந்த 2013-2018 ல் கர்நாடகா முதல்வராக இருந்த நிலையில் இன்று மீண்டும் 2வது முறையாக முதல்வராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில் தான் சித்தராமையா பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதாவது அரசியலில் பெரிய ஆளாக வருவீர்கள் எனக்கூறிய ஜோதிடரை சித்தராமையா விரட்டியடித்துள்ளாராம். மைசூர் மாவட்டம் சித்தராமயனஹூன்டி கிராமத்தை சேர்ந்த சித்தராமையா தனது இளமை காலத்தில் தாலுகா போர்டு தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினார். அப்போது அவரது தந்தை சித்தராமயனகவுடா எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் சித்தராமையா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அது 1979வது ஆண்டாகும்.
இந்த வேளையில் சித்தராமையா ஒரு கடையின் முன்பு இருந்தார். அப்போது சோலிகா வகுப்பை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் வந்து அவரை பார்த்து அரசியலில் பெரிய நபராக வருவீர்கள் என கூறினார். ஆனால் சித்தராமையாவுக்கு ஜோதிடம் மீது எல்லாம் நம்பிக்கை இல்லாததால் அவரை அங்கிருந்து விரட்டியுள்ளார்.
அதன்பிறகு 1983ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சித்தராமையா சாமுண்டேஸ்வரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு சோலிகா காலனிக்கு சித்தராமையா சென்றார். இந்த வேளையில் அந்த ஜோதிடர் அவரை பார்த்து, ‛‛நான் அன்றே கூறினேன் அல்லவா.. நீங்கள் அரசியலில் பெரிய ஆளாக வருவீர்கள்'' என கூறி நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்தினார்.
இதையடுத்து அந்த நபர் கூறிய வார்த்தை சித்தராமையாவுக்கு நினைவுக்கு வந்தது. அப்போது சிரித்த சித்தராமையா தனது செயலுக்கு லேசாக வருந்தி 25 பைசாவை அவருக்கு ‛கிப்ட்' ஆக கொடுத்தார். இந்த தகவலை சித்தராமையாவே தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்ற நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications