மேகதாது அணை: கடுமையாக எதிர்த்த மு.க.ஸ்டாலின்.. ஒத்துழைப்பு தருமாறு ஸ்டாலினுக்கு, எடியூரப்பா கடிதம்!
பெங்களூரு: மேகதாது அணை இரு மாநிலங்களுக்கும் பலன் தரும் என்றும் இதற்கு ஒத்துழைப்பு தரும்படியும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூப்பா கடிதம் எழுதியுள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது. இந்த காவிரி நீர்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கிறது.
ஆனால் இந்த ஒப்பந்த விதிகளை மீறி கர்நாடக அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேகதாது திட்டம்
பெங்களுரு நகரில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே மேகதாது திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் விடாப்பிடியாக கூறினார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இதற்கு ஒருசேர எதிர்ப்பு தெரிவித்தன.

மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இது இரு மாநில நல்லுறவுக்கும் உகந்தது அல்ல என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு வலியுறுத்தி இருந்தார். சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதி கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

எடியூரப்பா கடிதம்
தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எடியூரப்பா கூறியுள்ளதாவது:- மேகதாது அணை விவகாரத்தில் ஒத்துழைப்பு தருமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். மேகதாது ஆணையால் இரு மாநிலங்களுக்கும் பலன் ஏற்படும்.

ஒத்துழைப்பு தர வேண்டும்
மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகளும் தொடர்புடைய அதிகாரிகள் முன்னிலையில் தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம். தமிழ்நாட்டின் காவிரி பவானி படுகையில் தமிழ்நாடு அரசு இரண்டு நீர்மின் திட்டங்களை செயல்படுத்துகிறது. இதற்கு கர்நாடக அரசின் ஒத்துழைப்பையோ, அவர்களின் அனுமதியையோ தமிழ்நாடு அரசு கோரவில்லை. பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே மேகதாது அணை கட்டப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எடியூரப்பா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications