பாஜகவின் ’கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு’ ஆபரேஷன்?சித்தராமையாவுக்கு எதிராக அமைச்சர் போர்க்கொடி!
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்; ஆனால் கட்சி தலைமையுடன் இதுபற்றி விவாதிப்போம் என அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி பகிரங்கமாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சிக்கிறது; எம்.எல்.ஏக்களுக்கு ரூ50 கோடி பேரம் பேசியிருக்கிறது என்றெல்லாம் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

பாஜகவுடன் கை கோர்த்த ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமியும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைக் கொண்டே காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்படும் என்றெல்லாம் பேசியிருந்தார்.
பின்னர் இந்த ஆட்சி கவிழ்ப்பு விவாதங்கள் அடங்கின. தற்போது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு பற்றி பேசப் போய் மீண்டும் பஞ்சாயத்து வெடித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்குப் பின்னர், மகாராஷ்டிராவில் சிவசேனா உடைக்கப்பட்டு பாஜக ஆட்சி அமைக்கப்பட்ட பாணியில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்படும் என கூறியிருந்தார்.
ஏக்நாத் ஷிண்டேவின் இந்தப் பேச்சுக்கு முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். கர்நாடகா காங்கிரஸில் எந்த பிரச்சனையுமே இல்லை; அனைவரும் ஒற்றுமையுடன் லோக்சபா தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம் என கூறியிருந்தார். கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திராவும், ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கர்நாடகா அமைச்சர் சதீஷ் ஜர்ஹிகோலி பகிரங்கமாக பேசிய விஷயங்கள், பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு ஆபரேஷனை உறுதி செய்வதாக இருக்கிறது என்கின்றன அம்மாநில அரசியல் வட்டாரங்கள். கர்நாடகா அமைச்சர் சதீஷ் ஜர்ஹிகோலி செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக இருக்கிறார்கள் என சொல்ல முடியாது. அதற்காக ஆட்சியை கவிழ்க்கவும் செய்யமாட்டார்கள் என்றார்.
மேலும், நாங்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேதான் போராட்டம் நடத்துகிறோம். காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. அவை எல்லாம் உட்கட்சி பிரச்சனை. இதனை வெளிப்படையாகவும் பேச முடியாது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது உண்மைதான். இதனை ஏன் மறுக்க வேண்டும்? வளர்ச்சித் திட்டங்கள், இட மாறுதல்கள் என பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது இந்த பிரச்சனைகள் இருக்கும். இதற்கு நாங்களே தீர்வு காண்போம். இதற்காக ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்றார். அமைச்சர் சதீஷ் ஜர்ஹிகோலியின் இந்த பகிரங்க அதிருப்தி குரல் காங்கிரஸ் விஸ்வரூபமெடுக்கக் கூடும் என்கின்றன கர்நாடகா அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications