57% எதிர்ப்பு.. பாஜக ஆட்சியா? வேண்டவே வேண்டாம்.. கர்நாடகா தேர்தல் கருத்து கணிப்பில் ‛கை’க்கு ஆதரவு
பெங்களூர்: கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி வேண்டாம் என்று 57 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அதிகமான மக்கள் காங்கிரஸ் கட்சி தான் அடுத்த முறை ஆட்சிக்கு வரும் என கூறியுள்ளனர். சிவோட்டர் நடத்திய இந்த கருத்து கணிப்பின் முழுவிபரம் வருமாறு:
கர்நாடகாவில் கடந்த 2018 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. ஜனதாதளம்(எஸ்) கட்சியின் குமாரசாமி முதல்வரானார்.
ஓராண்டுக்கு பிறகு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. மாறாக பாஜக ஆட்சியை பிடித்தது. முதல் 2 ஆண்டு வரை எடியூரப்பா முதல்வராக இருந்த நிலையில் தற்போது பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார்.

தேர்தல் தேதி அறிவிப்பு
கடந்த 2018ல் தேர்தல் நடந்த நிலையில் 5 ஆண்டு நிறைவு பெற உள்ளது.இந்நிலையில் தான் நேற்று கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மே மாதம் 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடக்க உள்ளார். ஓட்டு எண்ணிக்கை மே 13ல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் கர்நாடகா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என தேர்தலுக்கு முன்பாகவே களைகட்டிய கர்நாடகா அரசியல் கட்சி தலைவர்கள் தற்போது இன்னும் சுறுசுறுப்பாக பணியாற்ற தொடங்கி உள்ளனர்.

வெளியாகும் கருத்து கணிப்புகள்
இந்நிலையில் தான் கர்நாடகா தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சிவோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பு முடிவு என்பது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கருத்து கணிப்புகளில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் தற்போதைய பாஜக ஆட்சியை மீண்டும் விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.

57 சதவீதம் பேர் பாஜகவுக்கு எதிர்ப்பு
அதாவது கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 57 சதவீதம் பேர் கர்நாடகாவில் தற்போதைய பாஜக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் மீண்டும் பாஜக ஆட்சியை விரும்பவில்லை என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக 17 சதவீதம் பேர் மட்டும் பாஜக ஆட்சியை விரும்புவதோடு, ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி
இதுதவிர கர்நாடகாவில் மீண்டும் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? என கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு 39 சதவீதம் பேர் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமையும் எனவும், 34 சதவீதம் பேர் மீண்டும் பாஜக தான் ஆட்சியை தக்கவைக்கும் என தெரிவித்ததாக சிவோட்டர்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசவராஜ் பொம்மை சரியில்லை
மேலும் முதல்வர் பசவராஜ் பொம்மையின் செயல்பாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு 47 சதவீதம் பேர் மோசம் என கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஊழல், முறைகேடு, வேலைவாய்ப்பின்மை, உள்கட்டமைப்பு குறைபாடு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டிய மக்கள் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துள்ளனர். இது கர்நாடகா பாஜகவுக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2008 முதல் 2013 வரையி கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் முறைகேடு, ஊழல் புகார்கள் எழுந்தன. இதனால் 2013 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

ஆட்சியை தக்க வைக்க போராட்டம்
மேலும், கடந்த 2014 முதல் 2019 வரை ஜார்கண்டில் பாஜக ஆட்சி நடந்தது. அப்போது பாஜக அரசு மீது பல்வேறு ஊழல், முறைகேடு புகார்கள் எழுந்தன. இது பாஜகவுக்கு எதிராக அமைந்தது. இதனால் 2019 தேர்தலில் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. சமீப காலமாக பார்த்தால் பாஜக ஆளும் பிற மாநிலங்களில் ஊழல், முறைகேடு புகார்கள் ஜார்கண்ட் மாநில ஆட்சி அளவுக்கு வந்தது இல்லை. இருப்பினும் தற்போது கர்நாடகா பாஜகவுக்கு எதிராக மக்கள் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை தக்கவைக்க போராட வேண்டிய சூழல் ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜகவுக்கு இருக்கும் ஆறுதல்
இருப்பினும் கூட தற்போதைய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு ஆதரவான விஷயம் ஒன்று உள்ளது. அதாவது கடந்த ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக சிவோட்டர் இதேபோல் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 46.6 சதவீதம் பேர் பாஜக வெற்றி பெறும் என தெரிவித்தனர். மாறாக 43.2 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என தெரிவித்தனர். இருப்பினும் அங்கு காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடித்தது. அதாவது கருத்து கணிப்பில் பாஜகவுக்கு அதிகமானவர்கள் ஆதரவு தெரிவித்தும் கூட காங்கிரஸ் கட்சி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கருத்து கணிப்பு முடிவு பலிக்காமல் போனது. இதுதான் கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது. இருப்பினும் அதுபோன்ற சம்பவம் கர்நாடகாவில் நடக்குமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications