ஆசையோடு வந்த மைசூர் மகாராணி.. ஓட்டுபோட விடாமல் திருப்பி அனுப்பிய அலுவலர்.. பரபரப்பு- என்னாச்சு?
பெங்களூர்: கர்நாடகா தேர்தலில் இன்று ஓட்டுப்போட மைசூர் மகாராணி பிரமோதா தேவி சென்ற நிலையில் அவரை வாக்குச்சாவடி அலுவலர்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் தங்களின் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டு செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் மைசூர் மகாராணி பிரமோதா தேவியும் இன்று ஓட்டுப்போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்ற புறப்பட்டு சென்றார். ஆனால் அவரை ஓட்டுபோட விடாமல் ஊழியர்கள் திருப்பி அனுப்பினர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
மைசூர் மகாராணியாக இருப்பவர் பிரமோதா தேவி. இவர் மைசூர் அரண்மனையில் வசித்து வருகிறார். இவருக்கு மைசூர் கேஆர்பேட்டை சட்டசபை தொகுதியில் ஓட்டு உள்ளது. அங்கு 179ம் பூத்தில் பிரமோதா தேவி ஓட்டு போட வேண்டும். இந்நிலையில் தான் இன்று காலையில் அவர் ஓட்டு போடுவதற்கான அரண்மனையில் இருந்து வாக்குச்சாவடிக்கு புறப்பட்டு சென்றார்.
வாக்குச்சாவடிக்குள் அவர் நுழைந்து ஆர்வமாக ஓட்டளிக்க சென்றார். அப்போது அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டு போடுவதற்கான பிற அடையாள அட்டைகளை வாக்குச்சாவடி பணியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் தன்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை என்றார். மேலும் அடையாள அட்டைகள் தனது செல்போனில் போட்டோக்களாக உள்ளதாகவும் கூறினார். அதனை காட்டி ஓட்டு அளிக்க உரிமை கோரினார்.
ஆனால் வாக்குச்சாவடி அலுவலர்கள் மறுப்பு தெரிவித்தனர். ஏதேனும் ஒரு அடையாள அட்டை கட்டாயமாக வேண்டும். அது இருந்தால் மட்டுமே ஓட்டளிக்க முடியும் என்றனர். இதனால் மகாராணி பிரமோதா தேவி ஏமாற்றமடைந்தார். இதையடுத்து அவர் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறி அரண்மனைக்கு வந்தார். அதன்பிறகு அவர் தனது ஓட்டைப் போட வசதியாக போட்டோவுடன் கூடிய ஆவணத்தை எடுத்து சென்று ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார். இந்த சம்பவம் அந்த வாக்குச்சாவடி மையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுதந்திரமடைவதற்கு முன்பு இந்திய நிலப்பரப்பை மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். மைசூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளை உடையார் மன்னர்கள் ஆட்சி செய்தனர். மைசூர் கடைசி மன்னராக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ உடையாரின் மனைவி தான் பிரமோதா தேவி. இதனால் தான் அவர் மகாராணி என அழைக்கப்பட்டு வருகிறார்.
மைசூரில் ஆண்டுதோறும் தசரா விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தசரா விழா மைசூர் தற்போதைய மகாராஜாவாக உள்ள பிரமோதா தேவியின் தத்து மகனும், மைசூர் மன்னர் வாரிசாக இருக்கும் யதுவீரை மையப்படுத்தி தான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications