பாக்யராஜ் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!
சென்னை: மறைந்த இயக்குநர், நடிகருமான பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த மரியாதை வழங்கப்படுவதாகவும், அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளரான கே. பாக்யராஜ், சென்னையில் திடீர் மாரடைப்பால் இன்று காலமானார். 73 வயதான அவரது மறைவு தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரையுலகுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பாக்யராஜ் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் மனதில் நீங்கா இடம்!
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அரசு மரியாதை வழங்கப்படும்
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications