கட்டுக்கட்டாக பணம் எடுத்து சென்றேனா.. ஹெலிகாப்டரில் போவது ஏன் தெரியுமா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்
பெங்களூர்: கால விரயத்தை குறைப்பதற்காகவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். தோல்வி பயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் என்று கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை கூறினார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளது. தேர்தல் நெருங்கி உள்ளதால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை பாஜக தலைமை நியமித்துள்ளது.

அண்ணாமலை கர்நாடகாவில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு வரப்பட்டதாக உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொர்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டதாகவும் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் கவால்துறையிடமும் புகார் அளித்து இருக்கிறேன். தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

இந்த நிலையில், காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், "எல்லோரும் அவர்களை போலவே கருதுகிறார்கள். நான் சாமானியன். எங்களது கொள்கை வேறு. அவர்களது கொள்கை வேறு. கால விரயத்தை குறைப்பதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன்.
பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் பயண நேரத்தை குறைக்க ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறோம். எங்கள் வெற்றி உறுதியானதால் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். தோல்வி பயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications