எனக்கே சீட் இல்லையா? வெறுத்துப்போய் காங்கிரஸில் சேர்ந்த அடுத்த நாளே லக்ஷ்மண் சவதிக்கு ‘ஜாக்பாட்’!
பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதிக்கு, சேர்ந்த அடுத்த நாளே காங்கிரஸில் சீட் வழங்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து காங்கிரஸில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவுக்கு சென்ற மகேஷ் குமதல்லி போட்டியிடுகிறார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பாஜக இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கர்நாடகா முன்னாள் முதல்வர், துணை முதல்வர், பலமுறை எம்.எல்.ஏவாக இருந்தவர்கள் என சீனியர்கள் பலருக்கும் வெறும் கையைக் காட்டியுள்ளது பாஜக தலைமை.
சீட் இல்லை : தனக்கு சீட் மறுக்கக்கப்பட்டதால், பாஜகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த கர்நாடகா முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமண் சவதி, தனது எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நான் முடிவெடுத்து விட்டேன். மற்றவர்களைப் போல நான் பிச்சைப் பாத்திரம் ஏந்திக்கொண்டு அலையவில்லை. நான் ஒரு சுயமரியாதை மிக்க அரசியல்வாதி." என்று தெரிவித்தார்.
லட்சுமண் சவதி தவிர, சுல்லியா தொகுதியிலிருந்து ஆறுமுறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.அங்கரா, எம்எல்சி சங்கர், முடிகரே எம்எல்ஏ குமாரசாமி, எம்எல்ஏ கூலிஹட்டி சேகர் உள்ளிட்ட தலைவர்களும் பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட காரணத்தால் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினர் மத்தியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு பின்னர், மிகவும் செல்வாக்கு பெற்ற தலைவர் லட்சுமண் சவதி என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸுக்கு ஜம்ப் : மூன்று முறை அத்தானி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருந்தவர் லட்சுமண் சவதி. ஆனால் பாஜக வேட்பாளர் பட்டியலில் அத்தானி தொகுதி வேட்பாளராக, காங்கிரஸில் இருந்து வந்து சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த மகேஷ் குமதல்லி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் அதிருப்தியடைந்த லட்சுமண் சவதி பாஜகவில் இருந்து விலகி, நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமண் சவதி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரை சித்தராமையாவின் வீட்டில் நேற்று சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், "தான் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் உணர்கிறார். இவரைப் போன்ற சிறந்த தலைவர்களை காங்கிரஸில் இணைத்துக்கொள்வது எங்களின் கடமை" என்றார்.
ஒரே நாளில் : இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் லட்சுமண் சவதிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், மூன்றாவது கட்டமாக 43 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதில் பாஜகவில் இருந்து விலகி, நேற்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதிக்கு அடுத்த நாளே, அத்தானி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 முறை லட்சுமண் சவதி வென்ற அதே தொகுதியிலேயே காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தம் 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. வேட்பு மனு தாக்கல் வரும் 20ஆம் தேதியோடு முடிவடைவதால், கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications