காதலனுக்காக சொந்த வீட்டிலேயே தங்கம்-பணம் திருடிய இளம்பெண்.. எப்படி சிக்கினார் என்பது தான் சுவாரஸ்யம்
பெங்களூர்:காதலனுக்காக சொந்த வீட்டிலேயே நகை-பணம் திருடிய இளம்பெண் கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் கையும் களவுமாக சிக்கி உள்ளார்.. காதலன் தொழில் தொடங்குவதற்காக தனது சொந்த வீட்டிலேயே நகை-பணம் ஆகியவற்றை திருடிவிட்டு கொள்ளைப்போனதாக நாடகமாடிய இளம்பெண், எப்படி சிக்கினார் என்பதுமிகவும் சுவராஸ்யமானது.. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய 2கே கிட்ஸ் பெண்கள் காதலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளார்கள். அதே காதலன் தவறு செய்தால், ஏமாற்றினால், ஈஸியாக போடா, எனக்கு வேறு வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறேன் என்று சென்றுவிடுகிறார்கள். காதல் என்பதை அவசரப்பட்டு அணுகும் அதேநேரம், காதலில் பிரச்சனை ஏற்பட்டால் தைரியமாகவும் எதிர்கொள்கிறார்கள். அதேநேரம் சிலர் காதலனுக்காக வில்லங்கத்தில் சிக்கிகொள்ளவும் செய்கிறார்கள். அப்படி ஒரு காதல் ஜோடியை பற்றித்தான் பார்க்க போகிறோம்.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள அகரபன்னிஹட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதாகும் தஸ்லிமா கானம் என்ற பெண், சிவமொக்கா டவுன் இலியாஸ் நகரில் வசித்து வரும் உறவினரான முஜிபுல் சேக் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு உறவினர்கள் என்ற போதிலும் இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தஸ்லிமாவின் வீட்டில் நகைகள் மற்றும் ரொக்கப்பணம் திடீரென்று காணாமல் போய்விட்டது.
இதுகுறித்து தஸ்லிமா, தாவணகெரே மாவட்டத்தில் உள் சென்னரிகிரி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தான் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் அத்துமீறி மர்மநபர்கள் 2 பேர் நுழைந்தார்கள் என்றும் அவர்கள் எனது முகத்தில் மிளகாய் பொடி தூவியதுடன், மயக்க மருந்து தெளித்துவிட்டு வீட்டின் பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.1.27 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஸ்லிமா உள்பட அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தஸ்லிமாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரது செல்போன் அழைப்புகளையும் சைபர் கிரைம் போலீசார் மூலம் கைப்பற்றி ஆய்வு செய்தார்கள். அதில் கொள்ளை நடந்ததாக தஸ்லிமா கூறிய நேரத்தில் அவர் தனது காதலன் முஜிபுலுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
அதையடுத்து சென்னரிகிரி போலீசார் தஸ்லிமாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது தனது வீட்டில் தன்னுடைய காதலன் முஜிபுலுடன் சேர்ந்து நகைகள் மற்றும் பணத்தை திருடியதை தஸ்லிமா ஒப்புக்கொண்டார். மேலும் அவற்றை தனது காதலன், தொழில் தொடங்குவதற்காக திருடியதாகவும், பெற்றோர் என் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க கொள்ளைப்போனதாக நாடகமாடியதாகவும் தெரிவித்தார்.இதனையடுத்து சென்னரிகிரி போலீசார், சொந்த வீட்டிலேயே திருடிவிட்டு நாடகமாடிய தஸ்லிமா மற்றும் அவரது காதலன் முஜிபுல் ஆகிய 2 பேரையும் கைது செய்தடன் அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். காதலனுக்காக சொந்த வீட்டிலேயே இளம்பெண் நகை-பணம் திருடிய சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications