அரசு பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை.. உத்தரவிட்ட அரசு
பெங்களூர்: கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் நீட்டிப்பு செய்து கர்நாடகா அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 1.5 லட்சம் அரசு பெண் ஊழியர்கள் பலன்பெற உள்ளனர்.
கர்நாடகாவில் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 9 ம் தேதி இந்த கொள்கைக்கு கர்நாடகா அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதன்பிறகு நவம்பர் 12ம் தேதி முதல் மாநிலங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பபட்டுள்ளது.

இதனால் அனைத்து தனியார் துறை பெண் பணியாளர்களும் பயனடைய தொடங்கி உள்ளனர். அதன்படி 18 வயது முதல் 52 வயது நிரம்பிய பெண் ஊழியர்கள் மருத்துவ சான்று எதுவும் வழங்காமல் மாதவிடாய் விடுமுறையை எடுத்து பயன்பெறலாம்.
ஆனால் இந்த விடுமுறை அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பொருந்தாமல் இருந்தது. இதனால் அரசு பெண் ஊழியர்களுக்கு இந்த பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் பெங்களூர் ஹோட்டல்கள் சங்கம் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛கர்நாடகாவில் மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அரசு ஊழியர்களுக்கு பொருந்தாமல் உள்ளது. இது பாகுபாடான நடவடிக்கை. இதனால் அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த சம்பளத்துடன் கூடிய ஒருநாள் மாதவிடாய் விடுமுறையை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். ஏனென்றால் பெண்கள் அதிகமாக அரசு பணி செய்யும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று'' என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து கர்நாடகா அரசும் வாதத்தை ஏற்றுக்கொண்டது. மேலும் அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதாக அறிவித்தது. அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுது்து மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கும் கிடைத்துள்ளது.
அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும். இதற்கு ஊழியர்கள் மருத்துவ சான்று எதையும் வழங்க வேண்டாம். இந்த விடுமுறை பிற விடுமுறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இதனால் இதற்கு தனி ஆவணத்தை பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் கூடுதலாக 1.5 லட்சம் பெண்கள் பயன்பெற உள்ளனர்.












Click it and Unblock the Notifications