தனியார் துறையில் 100% கன்னடர்களுக்கு வேலை.. அப்பட்டமான பாசிசம்.. கொந்தளிப்பில் நிறுவனங்கள்!
பெங்களூர்: கர்நாடகாவில் தனியார் துறையில் சி, டி பிரிவு பணியிடங்கள் 100% கன்னடர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் மசோதாவுக்கு தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கர்நாடகா காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கை பாசிசப் போக்கானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது; பாகுபாடு காட்டக் கூடியது என பெரு நிறுவனங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்பது நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவிலும் தனியார் துறையில் இடஒதுக்கீடு தேவை என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு தனியார் துறைகளில் இடஒதுக்கீடு தேவை என்பதும் கோரிக்கை.

இன்னொரு பக்கம், தனியார் துறைகளில் அந்தந்த மாநில மக்களுக்குதான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சட்டங்கள் நிறைவேற்றி இருக்கின்றன. இந்த சட்டங்கள் சர்ச்சைகளாகவும் வெடித்திருக்கின்றன.
கர்நாடகா மசோதா: தற்போது இந்த சர்ச்சைப் பட்டியலில் கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும் இணைந்திருக்கிறது. கர்நாடகா அரசு தற்போது ஒரு மசோதாவை உருவாக்கி அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. அந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

1) கர்நாடகாவின் தனியார் நிறுவனங்களில் சி,டி பணியாளர் பணியிடங்களை 100% கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
2) தனியார் நிறுவன மேலாளர் உள்ளிட்ட நிர்வாக பணிகளில் கன்னடர்களுக்கு 50% வழங்க வேண்டும்.
3) தனியார் நிறுவனங்களில் நிர்வாகம் அல்லாத இதர பணிகளில் கன்னடர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
4) கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர்கள்; கர்நாடகாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் வசித்து கன்னட மொழியை எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் இந்த இடஒதுக்கீடு உரிமையைப் பெறக் கூடியவர்கள்.
5) கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர மறுக்கும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.

சட்டசபையில் தாக்கல்: இந்த மசோதா கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட உள்ளது. ஆனால் கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் இந்த மசோதாவுக்கு தொடக்க நிலையிலேயே கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
பாசிசம்.. அரசியல் சாசன விரோதம்: மணிபால் கல்வி குழுமங்களின் தலைவர் மோகன்தாஸ் பாய், கர்நாடகா அரசின் இந்த மசோதா பாசிசத்தனமானது; அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என விமர்சித்துள்ளார். இன அடிப்படையில் பாகுபாடு காட்டுவது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களை பாதிக்க கூடாது: பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிரன் மஜூம்தான் சா, தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை திறமையாளர்களுக்குதான் முன்னுரிமை தரப்படும். இத்தகைய மசோதா, தொழில் நிறுவனங்கலின் செயல்பாடுகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்கிறார்.
எப்படி கண்காணிக்க முடியும்?: YULU இணை நிறுவனரும் அசோசெம் இணை தலைவருமான ஆர்கே ஸ்ரா, கர்நாடகா அரசின் இந்த முடிவை ஒவ்வொரு தனியார் நிறுவனமும் செயல்படுத்துகிறதா? என்பதை கண்காணிக்க ஒவ்வொரு அதிகாரியையா நியமிக்க முடியும்? தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அச்சுறுத்தக் கூடியதாக இந்த நடவடிக்கை இருக்கிறது என்கிறார். கர்நாடகா அரசின் மசோதா சட்டமாக நடைமுறைக்கு வரும் முன்னரே கடும் எதிர்ப்புகள் அணிவகுத்து நிற்கின்றன.












Click it and Unblock the Notifications