குண்டுவெடிப்பு சதி! கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்த திட்டம் போட்ட ஜேடிஎஸ் கவுன்சிலர்? தூக்கிய போலீஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் இந்துக்களை குறிவைத்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி, அதன் மூலமாக பாஜக அரசை வீழ்த்துவதற்கு திட்டமிட்டதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியை சேர்ந்த கவுன்சிலரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த சதித்திட்டம் தொடர்பான அவரது செல்போன் பேச்சு ரெக்கார்டை ஆதாரமாகக் கொண்டு அவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
சுமார் 50 இடங்களுக்கும் மேல் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்த அவர் திட்டம் தீட்டி வந்ததும், இந்த தாக்குதலை அரங்கேற்றுவதற்காக அவர் தனது நெருக்கமானவர்களிடம் பணம் பெற்று வந்ததும் அம்பலமாகி உள்ளது.

பாஜக மீது அதிருப்தி
வட இந்தியாவில் கோலோச்சி தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ள பாஜகவால், தென்னிந்தியாவில் எவ்வளவு முயன்றும் கால் பதிக்கவே முடியவில்லை. ஆனால், கர்நாடகா மட்டுமே அதற்கு விதிவிலக்காக உள்ளது. தென்னிந்தியாவில் இப்போதைக்கு பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது கர்நாடகா மட்டும்தான். அதே சமயத்தில், தற்போது கர்நாடாகவில் பாஜக ஆட்சியின் செயல்பாடுகள் மீது பெரும்பாலான மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவை வீழ்த்த மும்முரம்
அரசுப் பணி, ஒப்பந்தம் என எதற்கெடுத்தாலும் 'கமிஷன்' பெறுவதாக கர்நாடகா அரசு மீது பெரிய குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல, இந்துத்துவா கோஷமும், வெறுப்பு பிரசாரமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே நெருங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தல், இந்த முறை பாஜகவுக்கு சவாலாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல, இந்த சந்தர்ப்பத்தை பயன்டுத்தி எதிர்வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்திவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. இதுபோன்ற சூழலில், பாஜக மீது பழிபோட ஒரு கவுன்சிலர் போட்ட மிகப்பெரிய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

பயங்கர சதித்திட்டம் - பகீர் ஆடியோ
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரி மாநகராட்சியில் வார்டு கவுன்சிலராக இருப்பவர் முஸ்தஃபா. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவரது செல்போன் பேச்சு அடங்கிய ஆடியோ தான் தற்போது கர்நாடகாவில் தீயாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் கவுன்சிலர் முஸ்தபா, "மடிக்கேரியில் 50-க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகள் வெடிக்க வேண்டும். மடிக்கேரியே பற்றி எரிய வேண்டும். இந்துக்கள் சாகட்டும். இந்துக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தால்தான், ஆளும் பாஜக அரசுக்கு கெட்டப் பெயர் உண்டாகும். தேர்தலில் களம் இறங்கவே பாஜக பயப்பட வேண்டும். பாஜக இத்துடன் முடிக்கப்பட வேண்டும். இதற்காக, 50 பேரை கொண்ட டீமை உருவாக்க வேண்டும். அவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த திட்டம் நிறைவேறும்" இவ்வாறு அந்த ஆடியோ பேச்சு ஓடுகிறது.

கைது நடவடிக்கை
கடந்த வாரம் ஒரு ஒப்பந்தப் பணி தொடர்பாக சேஷப்பராய் என்பவருடன் கவுன்சிலர் முஸ்தபா செல்போனில் பேசி இருக்கிறார். பேசி முடிந்ததும் அழைப்பை துண்டிக்க மறந்த அவர், அப்துல்லா என்ற நபருடன் மேற்கண்ட சதித்திட்டம் தொடர்பாக பேசியுள்ளார். இந்த பேச்சை கேட்டதும் அதிர்ச்சியான சேஷப்பராய், இதை 'ரெக்கார்ட்' செய்து போலீஸாரிடம் கொடுத்திருக்கிறார். இந்த ரெக்கார்டிங்கை அடிப்படையாக வைத்து தற்போது முஸ்தபாவை மடிக்கேரி போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications