Hijab: பள்ளிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்! 2022ல் பாஜக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சித்தராமையா
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிப்பதாக அம்மாநில அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீக்கி முதல்வர் சித்தராமையாக மத அடையாளங்களை பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தற்போது சித்தராமையா முதல்வராக உள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முன்னதாக கடந்த ஆட்சியில் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடந்தது. அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டது.

பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஆங்காங்கே போராட்டங்களும் நடந்தன. இதனையடுத்து நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியிலேயே பள்ளிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என கூறியிருந்தார். இதற்கு பதவியேற்றதும் நடவடிக்கை எடுக்கபட்ட நிலையில் தற்போது கர்நாடக மாநில பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
"ஹிஜாப், தலைப்பாகை (டர்பன்), பூணூல் (புனித நூல்) மற்றும் ருத்ராட்சம் போன்ற மத அடையாளங்களை மாணவர்கள் நிறுவனச் சீருடைகளுடன் அணிய அனுமதிக்கிறது. இவை ஒழுக்கம், பாதுகாப்பு அல்லது மாணவர் அடையாளம் காணுதல் போன்றவற்றுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனை உண்டு.
மத அல்லது பாரம்பரியச் சின்னங்களை அணியவோ அகற்றவோ மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். கல்வி நிலையங்கள், "அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, சமத்துவம், கண்ணியம், சகோதரத்துவம், ஒழுக்கம், பரஸ்பர மரியாதை, சமூக நல்லிணக்கம், அரசியலமைப்பு ஜனநாயகப் பொறுப்புகளை" மேம்படுத்த வேண்டும். "அரசியலமைப்பு ரீதியான மதச்சார்பின்மை என்பது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு எதிரானது அல்ல; மாறாக, இது அனைவருக்கும் சமமான மரியாதையையும், நிறுவன நடுநிலைமையையும், பாரபட்சமற்ற நடத்தையையும் உறுதி செய்வதாகும்" என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:- "கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் முந்தைய பாஜக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் ஆடைகளை அணிய தடை விதித்தது. இதற்கு கர்நாடகாவில் உள்ள பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பெரும் போராட்டம் வெடித்தது. நாங்கள் இதுகுறித்து ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
அதன்படி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அதாவது பி.யூ.சி. வரை மாணவ-மாணவிகள் தங்களின் மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் அதாவது ஹிஜாப், பூணூல், கைகளில் கட்டப்படும் புனித கயிறு, ருத்ராட்சை மாலை, தலைப்பாகை உள்ளிட்டவற்றை அணியலாம். முஸ்லிம் சமூக மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. நடப்பு ஆண்டு முதல் இந்த உத்தரவானது அமலுக்கு வருகிறது.
கர்நாடகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இது பொருந்தும். இந்த மத அடையாள ஆடைகளை அணிந்து வரும் மாணவர்களை கல்வி நிறுவனங்கள் தடுக்க முடியாது. அரசியல் சாசன மாண்புகளுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நுழைவு தேர்வில் பூணூல் அணிந்து வந்த சில மாணவர்களை தேர்வு அரங்குக்குள் அனுமதிக்கவில்லை. இத்தகைய சம்பவங்கல் எல்லாம் வரும் நாட்களில் நடைபெறாது. மத அடையாள ஆடைகளை அணியும்படி மாணவர்களை வற்புறுத்த முடியாது. இதேபோன்று மத அடையாள ஆடைகளை அகற்றும்படியும் கூற முடியாது" என்றார்.














Click it and Unblock the Notifications