நாட்டையே உலுக்கிய படுகொலை.. கவுரி லங்கேஷ் கொலையாளியுடன் பாஜக மாஜி எம்பி நெருக்கம்! போட்டோ ரிலீஸ்
பெங்களூர்: பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் கைதான நவீன் குமாரின் தோளில் கைபோட்டு பாஜக முன்னாள் எம்பி பிரதாப் சிம்ஹா சகஜமாக பேசும் போட்டோவை வெளியிட்டு கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பரபரப்பை கிளப்பி உள்ளார். மேலும் இதன்மூலம் பாஜக முன்னாள் எம்பி பிரதாப் சிம்ஹா சமூகத்துக்கு எந்த செய்தியை சொல்ல வருகிறார்? என்று கேள்வி கேட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகாவில் மூத்த பத்திரிகையாளராக இருந்தவர் கவுரி லங்கேஷ். லங்கேஷ் பத்திரிகை என்ற பெயரில் பத்திரிகையை நடத்தி அதன் ஆசிரியராக இருந்து வந்தார். இவர் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர். மேலும் மனித உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வந்தார்.

இவர் தனது பத்திரிகையில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரை விமர்சனம் செய்து கட்டுரைகள் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த 2017 ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார்.
பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் கவுரி லங்கேஷ் வசித்து வந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு தப்பித்து சென்றனர். இந்த சம்பவம் கர்நாடகா மட்டுமின்றி மொத்த இந்தியாவையும் உலுக்கியது. இந்த வழக்கில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வழக்கில் கைதான மத்தூர் நவீன் குமார், சுரேஷ் மற்றும் அமித் ஆகியோருக்கு பெங்களூர் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் தான் கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் (காங்கிரஸ்) தற்போது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதாவது கவுரி லங்கேஷ் கொலையில் கைது செய்யப்பட்ட மத்தூர் நவீன் குமாருடன், மைசூர் - குடகு லோக்சபா தொகுதியின் முன்னாள் எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு தொடர்பு உள்ளதாக போட்டோ வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக தினேஷ் குண்டுராவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோவில் பாஜகவின் முன்னாள் எம்பி பிரதாப் சிம்ஹா, கவுரி லங்கேஷ் கொலையில் கைதான மத்தூர் நவீன் குமார் தோளில் கைபோட்டு பேசியபடி இருக்கிறார்.
மேலும் இந்த பதிவில் தினேஷ் குண்டுராவ், ‛‛இதுதான் கோட்சேவை வழிபடும் பாஜகவின் உண்மை முகம். கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு சமூகத்தில் அமைதியை சீர்க்குலைக்கும் நபர்கள் பாஜகவின் கருவறையில் இருக்கிறார்கள். தைரியமான பத்திரிகையாளராக அறியப்படும் கவுரி லங்கேசை கொன்றதை கண்டிக்காமல், வழக்கில் கைதான குற்றவாளியின் தோள் மீது கைபோட்டு பேசுவதன் மூலம் பாஜகவின் முன்னாள் எம்பி சமூகத்துக்கு எந்த செய்தியை சொல்ல வருகிறார்?'' என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications