கர்நாடகா அரசியலில் ‘ட்விஸ்ட்’.. பாஜகவுடன் கைகோர்த்த குமாரசாமி.. கூட்டணிக்கு அச்சாரம் போட்ட பொம்மை!
பெங்களூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணியுடன் கூட்டணி என்பதில் ஜேடிஎஸ் தெளிவின்றி இருந்து வந்த சூழலில் கர்நாடகா அரசியலில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவெடித்துள்ளதாக ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 66 இடங்களை வென்றது. ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் தனியாகக் களமிறங்கி வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

தனித்துக் களமிறங்கி 40க்கும் மேற்பட்ட இடங்களை வென்றால், பாஜக, காங்கிரஸ் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் கிங் மேக்கர் ஆகலாம் எனக் கணக்குப் போட்டது ஜேடிஎஸ். ஆனால், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் தொடர்பில்லாமல் நட்டாற்றில் தத்தளித்து வருகிறது ஜேடிஎஸ்.
2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையில் இறங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை பொருட்படுத்தவில்லை. அண்மையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமும், பாஜக கூட்டணி ஆலோசனையும் நடைபெற்ற நிலையில், என்.டி.ஏ கூட்டத்துக்கோ அல்லது எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கோ தாங்கள் அழைக்கப்படவில்லை என மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடகா அரசியலில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. பாஜக - ஜேடிஎஸ் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மஜத தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும், பாஜக தலைவரும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை இருவரும் இணைந்து நேற்று மாலை பெங்களூருரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய குமாரசாமி, "கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மக்களவைத் தேர்தலுக்கு பின் சிக்கல் ஏற்படும். கடந்த 2018ஆம் ஆண்டு காங்கிரஸூடன் கூட்டணி அமைக்காமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் நான் 5 ஆண்டுகள் பதவி வகித்திருப்பேன். காங்கிரஸ் கட்சியினர் எனக்கு மோசம் செய்துவிட்டனர். நான் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையை ஏற்காமல் போய்விட்டேன்.
காங்கிரஸ் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் மாநில நலன் கருதி காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவுடன் எங்களது கட்சி இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளது. மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கவே பாஜகவுடன் இணைந்திருக்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். எங்கள் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா இந்த விஷயத்தில் எனக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி விரைவில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை நான் அறிவிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
