விடாத எடப்பாடி.. கர்நாடகாவில் ஓ பன்னீர் செல்வம் அணி வேட்பாளருக்கு திடீர் நோட்டீஸ்.. அடுத்த சிக்கல்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பெங்களூர் காந்தி நகர் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குமார் அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அளித்த புகாரை தொடர்ந்து குமாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் ஓ பன்னீர் செல்வம் அணியும், அவரது வேட்பாளரும் சிக்கலில் சிக்கி உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட விரும்பியது. மேலும் பாஜக கூட்டணியில் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகளை அதிமுக கேட்டது. இதற்கு பாஜக செவிசாய்க்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தனித்து போட்டியிட திட்டமிட்டார்.

அதன்படி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பெங்களூர் புலிகேசி நகர் சட்டசபை தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூர் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இவரது மனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்மூலம் புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசன் அதிமுக வேட்பாளராக களத்தில் உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு போட்டியாக ஓ பன்னீர் செல்வம் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார். பெங்களூர் புலிகேசி நகரில் நெடுஞ்செழியன், பெங்களூர் காந்திநகர் தொகுதியில் குமார், கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
இவர்கள் 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் புலிகேசிநகர் தொகுதி வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாறாக கோலார் தங்கவயல் தொகுதி வேட்பாளர் அனந்தராஜாவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பி பார்ம் குளறுபடியாக அவர் சுயேச்சை வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாறாக பெங்களூர் காந்திநகர் தொகுதி ஓ பன்னீர் செல்வம் அணி வேட்பாளர் குமாரின் வேட்புமனு அதிமுக என ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இது குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் காந்திநகர் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் அணி வேட்பாளர் குமார் அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அவர்கள் கர்நாடகா தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து தான் தற்போது காந்திநகர் தொகுதி ஓ பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளரான குமாருக்கு கர்நாடகா தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீஸ் மூலம் அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு குமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடகா தேர்தலிலும் ஓ பன்னீர் செல்வம் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications