ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அரசு பேருந்துகள் ஓடாது.. போராட்டத்தை அறிவித்த கர்நாடக அரசு பஸ் ஊழியர்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். சம்பள உயர்வு உட்படத் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை கர்நாடக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகச் சொல்லி அம்மாநில அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி வருகின்றன. பேருந்துகள் என்பது சமூகத்தை வளர்த்து எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாகவே பல மாநிலங்களும் இந்த நஷ்டத்தைத் தாண்டி அரசுப் போக்குவரத்துக் கழகங்களைத் தொடர்ச்சியாக இயக்கி வருகிறது.

கர்நாடகா அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்
அதன்படி நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மாநில அரசின் கீழ் நான்கு போக்குவரத்துக் கழகங்கள் இருக்கின்றன. கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC), கல்யாண கர்நாடகச் சாலைப் போக்குவரத்துக் கழகம் (KKRTC), வடமேற்கு கர்நாடகச் சாலைப் போக்குவரத்துக் கழகம் (NWKRTC), மற்றும் பெங்களூர் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) என்று நான்கு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன.
அங்கு மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெங்களூரில் மட்டும் 7000+ பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அங்குச் சுமார் 1.5 லட்சம் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். இருப்பினும், கர்நாடகாவின் போக்குவரத்துக் கழகங்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிர்த்து வருகிறது.
கோரிக்கைகள்
இதனால் அங்கு அரசுப் பேருந்து கழக ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. மேலும் 38 மாதங்களாகப் பயணப்படி வழங்கப்படாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அம்மாநிலப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும், கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.
வேலை நிறுத்தம்
இந்தச் சூழலில் நேற்றைய தினம் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து தங்களின் பல்வேறு கோரிக்கைகளை கர்நாடக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகச் சொல்லி அம்மாநில அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். கர்நாடகாவில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். அதில் நிலுவைத் தொகையை விடுவிப்பது, ஊதிய திருத்தம் மற்றும் சரியான நேரத்தில் பதவி உயர்வு போன்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு புறக்கணிப்பதாகத் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அரசு மீது அதிருப்தி
கே.எஸ்.ஆர்.டி.சி ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் எச்.வி.அனந்த் சுப்பாராவ் இது குறித்துக் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் நாங்கள் எங்கள் உரிமைக்காக வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துகிறோம்.. அப்போது மட்டும் ஒரு சில நாட்களில் அல்லது மாதங்களில் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக அரசு உறுதியளிக்கிறது. ஆனால் எதுவும் மாறவில்லை.
பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் போன்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதான் அரசுக்கு நற்பெயரே கிடைக்கிறது. எங்கள் பங்களிப்பு இருந்தபோதிலும், அரசு எங்களை முற்றிலும் புறக்கணிக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications