முறிந்த அதிமுக கூட்டணி! தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்! திருவள்ளுவரை கூறி ட்விஸ்ட் வைத்த சிடி ரவி
பெங்களூர்: பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் தான் திருவள்ளுவரின் பூமியில் (தமிழ்நாடு) தாமரை மலர்ந்தே தீரும் என தமிழ்நாடு பாஜக முன்னாள் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இருந்தன. இந்நிலையில் தான் சமீபகாலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

சமீபத்தில் அண்ணாமலை மதுரையில் நடந்த கூட்டத்தில், அண்ணா, முத்துராமலிங் தேவரிடம் மன்னிப்பு கேட்டதாக பேசியிருந்தார். இதற்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டவர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
மேலும் அதிமுகவை சேர்ந்த பலரும், ‛‛அண்ணாமலை தவறான கருத்துகளை கூறியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என போர்க்கொடி தூக்கினர். ஆனால் அண்ணாமலையோ நான் பத்திரிகையில் வந்த செய்தியை தான் கூறினேன். இதில் மன்னிப்பு கேட்க முடியாது என வெளிப்படையாக பேசினார். இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுகவின் கூட்டணியில் பாஜக இல்லை. இது என் கருத்து அல்ல. அதிமுகவின் கருத்து என பேசி பரபரப்பை கிளப்பினார்.
மேலும் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த அதிமுக தலைவர்கள் அண்ணாமலையை தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக செவிசாய்க்கவில்லை. இதனால் அதிமுக தரப்பு அதிருப்தியடைந்தது. அதன்பிறகு சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பாஜக சார்பில் அதிமுகவை சமாதானம் செய்ய தூது அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக பிடி கொடுக்காமல் நழுவுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மேலிட பொறுப்பாளரும், கர்நாடகாவை சேர்ந்தவருமான சிடி ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒற்றை வரியில் ஒன்றை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛திருவள்ளுவர் பிறந்த பூமியில் தாமரை பெரிய அளவில் மலரும்'' என மறைமுகமாக தமிழகத்தை குறிப்பிட்டு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications