போக்சோ வழக்கு.. அவசரப்பட்டு நிரபராதியை தூக்கிய போலீஸ்! ரூ.5 லட்சம் அபராதம் போட்ட மங்களூரு நீதிமன்றம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் போக்சோ வழக்கில் காவல்துறையினர் குற்றவாளியை விட்டு விட்டு நிரபராதியை சிக்கவைத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனை கண்டுபிடித்த நீதிபதி நிரபராதியை விடுதலை செய்து இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளார்.
தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்காக போக்சோ வழக்குகளின் கீழ் கைது நடவடிக்கைகள் சில மேற்கொள்ளப்படுவதாக தொடர் புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கும் நிலையில் மங்களூரு சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
8 வயது பிஞ்சுக்கு பாலியல் தொல்லை.. யோகா டீச்சருக்கு சாகும் வரை சிறை! சென்னை போக்சோ கோர்ட் அதிரடி

கைது
கர்நாடக மாநிலம் மங்களூர் காவல் நிலையத்திற்கு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் தனது 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக தாய் ஒருவர் புகார் அளித்திருந்தார். இது குறித்து காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல உடனடியாக மகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தினர். இதனையடுத்து 'லேடி கோஷென்' மருத்துவமனையில் சிறுமிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளத மருத்துவர் சுந்தரி உறுதி செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியினுடைய சகோதரனின் நண்பனான நவீன் என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அதிருப்தி
இந்த விவகாரம் வெளியில் பேசுபொருளான நிலையில் கைது செய்யப்பட்ட நவீனின் பெற்றோர் குடியிருந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர். மேலும் வெளியில் தலைகாட்ட முடியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். இது தொடர்பான வழக்கை நடத்துவதற்கும் அவர்களிடம் போதுமான பொருளாதார வசதி இருக்கவில்லை. நவீன் ஏறத்தாழ ஓராண்டு காலம் சிறையில் தனது வாழ்நாளை கழித்துள்ளார். இந்த வழக்கில் தனது மகன் மீதான குற்றச்சாட்டை நவீனின் பெற்றோர் மறுத்து நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இருதரப்பினரின் இறுதி வாதங்களை கேட்ட நீதிபதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

விசாரணை
அதாவது, இந்த வழக்கில் நவீன் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததுள்ளது. சிறுமி தனது வாக்குமூலத்தின்போது நவீன் என்று கூறியுள்ளார். ஆனால் அது வேறு ஒரு நபராவார். காவல்துறையினர் இந்த வழக்கை விரைவில் முடித்து வைக்க வேண்டும் என்று சிறுமியின் சகோதரனுடைய நண்பன் நவீனை கைது செய்துள்ளனர். இதற்கு முழுக்காரணம் இரண்டு எஸ்ஐகள்தான். அவர்கள்தான் வாக்கு மூலத்தை முழுமையாக கேட்காமல் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து சிறுமியிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நவீன் தரப்பு வழக்கறிஞர் கோரியதையடுத்து இந்த உண்மை வெளிவந்துள்ளது.

உண்மையான குற்றவாளி
இதனையடுத்து தீர்ப்பு வழங்கிய மங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, "இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி வேண்டுமென்றே தப்ப வைக்கப்பட்டுள்ளார். வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட ரோசம்மா மற்றும் ரேவதி என இரண்டு காவல்துறை அதிகாரிகள் இதில் வேண்டும் என்றே ஒரு நிரபராதியை சிக்க வைத்துள்ளனர். இது சட்டவிரோதமானது மட்டுமன்றி அதிகாரத்தை அவர்கள் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் வகித்த பதவிக்கு துரோகம் செய்துள்ளனர். இந்த அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை தொடர அனுமதித்தால் சாமானிய மக்கள் நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும்.

அபராதம்
எனவே இவர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையை இவர்கள் தங்களது சொந்த ஊதியத்திலிருந்து 2 மாதங்களுக்குள் கட்ட வேண்டும். இவ்வாறு பெறப்படும் தொகையானது பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்படும் என கனத்த இதயத்தோடு தீர்ப்பளிக்கிறேன். மேலும் இரு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறேன்" என்று நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பை வழங்கியுள்ளார். போக்சோ வழக்கில் குற்றவாளியை தப்ப வைத்துவிட்டு நிரபராதியை தண்டித்ததற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.