விநாயக சதுர்த்தி கொண்டாட்டம்.. ஆகஸ்ட் 31இல் இறைச்சி விற்பனைக்கு முழு தடை! பெங்களூர் மாநகராட்சி பரபர
பெங்களூர்: நாடு முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி கருதப்படுகிறது. நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் பெரியளவில் இல்லாமல் இருந்தது.

படுஜோர்
இப்போது கொரோனா பெரியளவில் குறைந்துவிட்ட நிலையில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பிரம்மாண்டமான சிலைகளை வைக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது எவ்வித வன்முறையும் ஏற்படாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தடை
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாகப் பெங்களூரு மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது. அதாவது ஆகஸ்ட் 31 அன்று விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் பெங்களூரில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி
இது தொடர்பாகப் பெங்களூர் மாநகராட்சி சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. அதில், "விநாயகர் சதுர்த்தி நாளில் மிருகமாவதை மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது. அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி "விநாயகர் சதுர்த்தி" அன்று, விற்பனைக் கூடங்களில் விலங்குகளைக் கொல்வதற்கும், இறைச்சி விற்பனை செய்வதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.

விவாதம்
இதற்கு இணையத்தில் கலவையான விமர்சனங்களே எழுந்துள்ளது. ஒரு தரப்பினர் பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளைக் காக்கும் வகையில் இந்த உத்தரவு உள்ளதாகக் கூறி வருகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர், எந்த உணவைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்பதை அரசு ஒருபோதும் முடிவு செய்யக் கூடாது என்று சாடி வருகின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி
பெங்களூர் மாநகராட்சியின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம் பெங்களூர் மாநகராட்சி இதுபோன்ற உத்தரவைப் பிறப்பிப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு இதேபோன்ற தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications