பெரிய மாநிலங்களை உடனே பிரிக்கணும்.. அதுதான் நாட்டிற்கு நல்லது! மாஜி திட்ட கமிஷன் தலைவர் பரபர
பெங்களூர்: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து பலரும் ஆலோசித்து வரும் நிலையில், இது தொடர்பாக இந்தியத் திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத் தலைவரும் பொருளாதார நிபுணருமான மாண்டேக் சிங் அலுவாலியா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் புதிய நகரங்கள் உருவாகி பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மேலும் எப்படி அதிகரிக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகள் நடந்து வருகிறது.

மாண்டேக் சிங் அலுவாலியா:
இதற்கிடையே திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத் தலைவரும் பொருளாதார நிபுணருமான மாண்டேக் சிங் அலுவாலியா இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் இந்தியா 8 சதவீத வளர்ச்சியை அடையும் போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள்தொகை வேகமாக அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களைப் பிரிக்கலாம்:
பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், "இப்போது நான் சொல்வது கர்நாடகாவில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது இல்லை.. பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்த எனது பொதுவான கருத்து. அதாவது நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களை இரண்டு அல்லது மூன்றாகச் சிறிய மாநிலங்களாகப் பிரிப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். அப்போது தான் புதிய மாநிலங்கள் உருவாகி, வளர்ச்சிக்கு அது காரணமாக இருக்கும்.
இந்தியா அதன் கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி கூறியிருந்தார். இன்னும் அப்படியே இருக்க வேண்டும் எனச் சிலர் கருதுகிறார்கள். காந்தியே கூட 100 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியா கிராமங்களில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
இரண்டாம்கட்ட நகரங்கள்:
நாம் முக்கிய நகரங்களுக்கு அருகே இரண்டாம் கட்ட நகரங்களை வளர்த்தெடுக்க வேண்டும். அதுதான் பெங்களூர் போன்ற மக்கள்தொகை ஓவராக இருக்கும் நகரங்களுக்குத் தீர்வாகும். இதுவே பெருநகரங்களுக்குத் தீர்வாக அமையும். ஆனால், நமது நாட்டில் அதுபோல நடந்தது இல்லை. புதிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டால் மட்டுமே அதன் தலைநகரம் உருவாக்கப்படுகிறது.
நான் இங்கு உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி கூறியதைக் குறிப்பிட விரும்புகிறேன். அவர் தனது மாநிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தார். இது அரசியல் கடந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு. அப்படிச் செய்திருந்தால் உடனடியாக மூன்று நகரங்களை உருவாக்கியிருக்க முடியும். வேறு பல மாநிலங்களிலும் இதைச் செய்யலாம்.
கடினமான முடிவு தான்:
உதாரணமாக, மகாராஷ்டிராவில் விதர்பா பகுதியை நாக்பூரைத் தலைநகராகக் கொண்டு தனி மாநிலமாக்க வேண்டும். இது போன்ற கடினமான முடிவுகள் அரசியல் ரீதியாக எளிதானது அல்ல.. ஆனால், இந்த சீர்திருத்தங்களால் மட்டுமே மாற்றம் ஏற்படும் . 1991ல் நடந்தது போலப் பொருளாதார சீர்திருத்தத்தைச் செய்யலாமா என நீங்கள் கேட்டால் அதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும்.
அப்போது ஒட்டுமொத்தமாக உலகெங்கும் ஒரே கருத்தைத் தான் குறிப்பிட்டனர். கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் ஒழிக்கப்பட்ட உடன் சர்வதேச சந்தையுடன் நாம் இணைய அது மட்டுமே ஒரே வழியாக இருந்தது. எனவே அதை நாம் செய்தோம். ஆனால், இப்போது உலகில் அதே சூழல் இல்லை.
பிரச்சினை இருக்கு:
புவியியல் ரீதியாகப் பதற்றமான சூழல் இருக்கிறது. சீனாவுடன் மட்டுமின்றி அமெரிக்காவுக்குத் தனது நட்பு நாடுகளான கனடா மற்றும் மெக்சிகா நாடுகள் உடனும் பிரச்சினை இருக்கிறது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா சீனாவை அதிகம் சார்ந்து வருகிறது. ஐரோப்பியர்கள் ரஷ்யாவைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள். ஆனால், சீனாவைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை" என்றார்.
மேலும், பெங்களூர் உள்ளிட்ட பெருநகராட்சிகளுக்கு அதிகாரம் அதிகம் வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது தான் தேவையான வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். நமது நாட்டில் நகராட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்த சிக்கலைச் சரி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications