நடுங்குதே.. கணவன் கண்முன்னே 9மாத குழந்தையோடு உடல் எரிந்து பெண் பலி.. அறுந்த வயரால் பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் இன்று அதிகாலையில் நடைபாதையில் 9 மாத குழந்தையுடன் சென்ற பெண்ணை மின்சாரம் தாக்கியது. இதையடுத்து கணவன் கண்முன்னே குழந்தையுடன் அந்த பெண் நடைபாதையிலேயே உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் இன்று காலையிலேயே நடுங்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நடைபாதையில் 9 மாத மகளுடன் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி உடல் கருகி இறந்துள்ளார். இந்த ஷாக் சம்பவம் குறித்த சோகமான தகவல் வருமாறு:

பெங்களூர் காடுகோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹோப் பார்ம் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இவருக்கும் சவுந்தர்யா (வயது 23) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சுவிக்சா என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தான் இன்று காலை 6 மணிக்கு சவுந்தர்யா தனது குழந்தை மற்றும் கணவர் சந்தோசுடன் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். தனது குழந்தை மற்றும் டிராலி பேக்கை சவுந்தர்யா வைத்து கொண்டு நடைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது பின்னால் கணவர் பிற உடைமைகளை வைத்து கொண்டு நடந்து வந்தார். இவர்கள் சன்னசந்திரா-காடுகோடி ரோடு மற்றும் ஐடிபிபி-ஒயிட்பீல்டு ரோட்டை இணைக்கும் ஹோப் பார்ம் ஜங்ஷனில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நடைபாதையில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் சவுந்தர்யா மிதித்தார். அடுத்த நொடி அவர் மீதும் அவரது குழந்தையின் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் அவர் தனது குழந்தையுடன் நடைபாதையில் விழுந்து உடல் கருகி இறந்தார். அவரது 9 மாத குழந்தை சுவிக்சாவும் இறந்தது. இந்த சம்பவம் அவர்களின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த கணவர் சந்தோஷின் கண்முன்னே நடந்தது.
இதையடுத்து போலீசார் மற்றும் பெஸ்காம் மின்வாரிய அதிகாரிகள் வந்து இருஉடல்களையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சந்தோஷ் கொடுத்த புகாரில் காடுகோடி போலீசார் பெஸ்காம் மின்வாரிய அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெஸ்காம் ஒயிட்பீல்டு உதவி பொறியாளர் சேத்தன், ஜூனியர் என்ஜினீயர் ராஜண்ணா, ஸ்டேஷன் ஆபரேட்டர் மஞ்சுநாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் நடைபாதையில் சவுந்தர்யா மற்றும் அவரது மகள் இறந்து கிடக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சவுந்தர்யாவின் உடலில் மின்கம்பி சுற்றி இருக்கிறது. அதோடு சவுந்தர்யாவின் உடல் மற்றும் அவரது மகளின் உடல்களில் புகை வெளியாகி அவர்களின் உடல் எரிந்து கொண்டிருக்க பின்னணியில் உறவினர்களின் அழுகுரல் கேட்கிறது. இந்த வீடியோ பார்ப்போரை கலங்கடிக்க செய்கிறது. இந்நிலையில் தான் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications