நடத்தையில் சந்தேகம்.. முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கர்நாடகாவில் மசூதி அருகே நடந்த சம்பவம்
பெங்களூர்: கர்நாடகாவில் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கொடுத்த புகாரை தொடர்ந்து மசூதி நிர்வாகம் முஸ்லிம் பெண்ணை அழைத்து உருட்டுக்கட்டை, இரும்பு கம்பியால் நடுரோட்டில் வைத்து தாக்கிய சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவி வரும் நிலையில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா தாவரகெரேவை சேர்ந்தவர் ஜமால் அஹமது ஷமீர். இவரது மனைவி பெயர் ஷபினா பானு (வயது 38). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

ஷபினா பானுவின் உறவினர் நஸ்ரின் (வயது 32). கடந்த 7 ம்தேதி ஷபினா பானு வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு ஷபினா பானு தனது குழந்தைகள் மற்றும் நஸ்ரின் ஆகியோர் புக்கபுடி மலைக்கு சுற்றுலா சென்றனர். அன்றைய தினம் மாலையில் அவர்கள் அங்கிருந்து வீடு திரும்பினர்.
இரவு நேரம் ஆனதால் ஷபினா பானு, நஸ்ரினை வீட்டில் தங்க கூறினார். அவரும் வீட்டில் தங்கினார். அப்போது இருவருக்கும் தெரிந்த பயாஸ் என்பவர் வீட்டுக்கு வந்தார். அவரும் வீட்டில் தங்கியிருந்தார். வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த பினா பானுவின் கணவர் ஜமால் அஹமது ஷமீர் வீடு திரும்பினார். வீட்டில் ஷபினா பானு, நஸ்ரின் மற்றும் பயாஸ் ஆகியோர் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து இருப்பதை ஜமால் அஹமது ஷமீர் விரும்பவில்லை. அதோடு மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் சம்பவம் தொடர்பாக மசூதி நிர்வாகத்திடம் புகாரளித்தார். இந்த புகாரை தொடர்ந்து ஷபினா பானு, நஸ்ரின் மற்றும் பயாஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து இருந்தது மசூதி நிர்வாகம். அங்கு ஷபினா பானு சென்ற நிலையில் அவரை சிலர் கட்டை, கம்பியால் கொடூரமாக தாக்கினர். ஷபினா பானுவை சரமாரியாக தாக்கியதில் அவர் மயங்கினார். இதனை அங்கிருந்தவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதுபற்றி ஷபினா பானு சார்பில் தாவரகெரே போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையை தொடர்ந்து போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். அதன்படி முகமது நியாஸ், முகமது கவுஸ்பீர், சந்த் பாஷா, இனாயத் உல்லா, தஸ்தாகிர், ரசூல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இணையத்தில் பரவும் வீடியோவை பார்க்கும் பலரும் ஷபினா பானு மீது கொடூரமாக தாக்குதல் நடத்துவோரை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications