3 மாநிலங்களில் உள்ள 25 இடங்களில் என்.ஐ.ஏ இன்று ரெய்டு.. PFI புல்வாரிஷரீஃப் வழக்கு தொடர்பாக சோதனை!
பெங்களூர் : இன்று 3 மாநிலங்களில் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவை குறி வைத்து கர்நாடகாவில் 16 இடங்களிலும், பீகார், கேரளாவில் 9 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
புல்வாரிஷெரீப் சதி வழக்கில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் பல கட்டங்களாக சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று 3 மாநிலங்களில் உள்ள 25 இடங்களில் ரெய்டில் இறங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பீகார் சென்றபோது, அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டது கண்டறியப்பட்டது. உளவுத்துறை ரகசிய தகவலின்படி பாட்னாவில் திடீர் சோதனை நடத்தி 2 தீவிரவாதிகளை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பி.எஃப்.ஐ அலுலகங்களில் நாடு முழுவதும் என்.ஐ.ஏ சோதனை நடத்தப்பட்ட நிலையில், சட்ட விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பல்வேறு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
