என்னது நவம்பர் புரட்சியா.. சித்தராமையா சொன்ன குறியீடு.. கடுகடுக்கும் டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள்
பெங்களூர்: கர்நாடகா அரசியலில் முதலமைச்சர் பதவிக்கான மியூஸிகல் சேர் போட்டி மீண்டும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. 2023 ஆம் வருடம் முதலமைச்சர் பதவி சித்தராமையா, டி.கே. சிவக்குமாருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என கூறியிருந்தனர். தற்போது 2.5 வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், டி.கே சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவரை முதலமைச்சராக்க டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதனால் சித்தராமையா கடும் அதிருப்தியில் உள்ளார். இதுகுறித்து அவர் முதல்முறையாக வாய் திறந்து கருத்தும் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பொதுவாக ஆட்சியை பிடிக்க தான் அதிக சிரமப்படுவார்கள். ஆனால் கர்நாடக காங்கிரஸில் ஆட்சியை தக்க வைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 2023 தேர்தல் வெற்றியில் இருந்தே அந்த பஞ்சாயத்து தொடங்கிவிட்டது. கர்நாடகாவுக்கு யார் முதல்வர் என்ற பிரச்சனை எழுந்தது.

கர்நாடகா அரசியல்
சித்தராமையாவுக்கும், டிகே சிவக்குமாருக்கும் நடந்த அதிகார யுத்தத்தில் சித்தராமையா கர்நாடகா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். டி.கே. சிவக்குமார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இருப்பினும் காங்கிரஸ் சார்பில் அப்போது ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் சித்தராமையா முதல் 2.5 வருடங்களும், சிவக்குமார் அடுத்த 2.5 வருடங்களும் முதலமைச்சர்களாக இருப்பர் என்று கூறினர்.
அதன்படி இந்த நவம்பர் மாதத்துடன் முதல் 2.5 வருடங்கள் முடிந்துவிட்டன. இதனால் கர்நாடகா அரசியலில் பெரிய மாற்றம் இருக்க போகிறது, நவம்பர் புரட்சி என்று கடந்த சில வாரங்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்கு டி.கே சிவக்குமார் தன் ஆதரவாளர்கள் மூலமாகவும், முதலமைச்சர் பதவியை தக்க வைப்பதற்கு சித்தராமையா தன் ஆதரவாளர்கள் மூலமாகவும் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்கள்.
முதலமைச்சர் பதவி ரேஸ்
இந்நிலையில் சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் நேற்று டெல்லி சென்றுள்ளனர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த அவர்கள், சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் அவர்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபாலை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது கர்நாடகா அரசியலில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், "நவம்பர் புரட்சி எல்லாம் ஒன்றுமில்லை. அது ஊடகங்களால் சித்தரிக்கப்பட்ட ஒன்று. இப்படி ஒரு விஷயத்தை கிளப்பிவிட்டது ஊடகங்கள் தான். இது ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பம். உண்மையில் கட்சி அல்லது ஆட்சியில் புரட்சியோ, எந்த குழப்பமோ இல்லை. 5 வருடங்கள் ஆட்சியில் இருக்க எங்களை தேர்வு செய்துள்ளனர்.
சித்தராமையா டி.கே. சிவக்குமார்
5 வருடங்கள் நாங்கள் ஆட்சியில் இருப்போம். இந்த ஆட்சி நிறைவடைந்த பிறகு தேர்தல் நடைபெறும். அதிலும் நாங்கள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம். எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்." என்றார். அடுத்த 2.5 வருடங்களும் நான் தான் முதல்வர் என்கிற ரீதியில் சித்தராமையா கருத்து இருப்பதாக,சிவக்குமாரின் ஆதரவாளர்களிடம் இது எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications