1322 பாலியல் பலாத்கார வழக்குகளில் வெறும் 10 பேருக்கு மட்டுமே தண்டனை.. அதிரவைக்கும் பெங்களூர் டேட்டா!
பெங்களூர்: 2013 முதல் 2023 வரை 11 ஆண்டுகளில் பெங்களூரில் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை விகிதம் வெறும் 0.76 சதவீதம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பதிவான 1,322 பலாத்கார வழக்குகளில் 10 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் 2013 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பதிவான 1,322 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 10 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம் வெளிவந்துள்ளது. குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனையை உறுதிசெய்ய அதிக விரைவு நீதிமன்றங்கள் தேவை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்தம் பதிவான 1,322 வழக்குகளில் 110 (8.32 சதவீதம்) வழக்குகளில் போலீசார் 'பி' அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட புகாரின் மீது போலீஸ் விசாரணையில் எந்த ஆதாரமும் இல்லாதபோது நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
மொத்தம் 259 வழக்குகள் (19.59 சதவீதம்) குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்றோ வேறு காரணங்களாலோ விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 18 சதவீத வழக்குகள் விசாரணையில் உள்ளன, அவற்றில் பல ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளன.
பல கற்பழிப்பு வழக்குகளை மேற்பார்வையிட்ட ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், விரிவான விசாரணைகள் கூட நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட இயலாமல் போகும். பல வழக்குகளில், மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் பதிவு செய்யும் போது, புகார்தாரர் எதிராக மாறுகிறார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், போலீசாருக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.
"எந்தவொரு பெண்ணும் தனக்கு நேர்ந்த இந்த துயரமான சம்பவங்களை நினைவுகூர விரும்புவதில்லை. கற்பழிப்பு வழக்குகளில் விசாரணைகள் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை நீடிக்கும், சில சமயங்களில், பல தசாப்தங்கள் வரை கூட இழுக்கும். பாதிக்கப்பட்ட ஒருவரால் தனக்கு நேர்ந்த கொடுமையை திரும்பத் திரும்ப சொல்ல முடியாது" என்று விஜயபுராவில் உள்ள அக்கமஹாதேவி மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சபிஹா பூமிகவுடா தெரிவித்துள்ளார்.
ஹாசன் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான ரூபா ஹாசன் கூறுகையில், “விரைவான தீர்ப்பை உறுதி செய்வதற்காக பலாத்கார வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்கள் தேவை. விரைவு நீதிமன்றங்கள் சாத்தியமில்லை என்றால், ஒவ்வொரு நீதிமன்றமும், கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க ஒரு பிரத்யேக பெஞ்ச்சையாவது வைத்திருக்க வேண்டும்.
அந்த நீதிமன்றங்களில் அல்லது பெஞ்ச்சில் பெண்கள் நீதிபதிகளாக இருக்க வேண்டும். மற்றும் வழக்கறிஞர்கள் கட்டாயம் பெண்களாக கேட்க வேண்டும். ஆனால், குறைந்தபட்சம், அத்தகைய வழக்குகளை கையாளும் நீதிமன்றங்களில் பணியாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஒரு பிரத்யேக சட்ட அமைப்பு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்கள் புகாருக்கு எதிராக மாறுவதற்கான நிகழ்வுகளை தவிர்க்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள இந்த அமைப்புகள் முதலில் ஆலோசனை வழங்க வேண்டும், பின்னர் பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளில் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்த வழக்குகள் உண்மையான எண்ணிக்கையில் 30-40 சதவீதத்தை மட்டுமே குறிக்கும் என்றும், மீதமுள்ளவை புகார் அளிக்கப்படாமலே போவதாகவும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்ட வழக்குகளும் கற்பழிப்பின் கீழ் பதிவு செய்யப்படுவதுதான் அதிக வழக்குகள் மற்றும் குறைந்த தண்டனை விகிதங்களுக்கு மற்றொரு காரணம். 16-17 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்ட வழக்குகளில், முதலில் புகார் அளிக்கும் அவர்களது குடும்பத்தினர், பின்னர் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக நீதிபதி முன் பேசும்போது மாற்றிப் பேசி விடுவதும் தண்டனை விகிதத்தை மேலும் குறைக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications