ட்விஸ்ட்! குமாரசாமி சொன்னது எல்லாம் பொய்யா? லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை - தேவேகவுடா
பெங்களூர்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கு பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைக்க உள்ளதாக பரவிய தகவல் அரசியல் களத்தில் பேசும்பொருளான நிலையில் அதுபற்றி முன்னாள் பிரதமர் தேவேகவுடா விளக்கம் அளித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கர்நாடகாவில் ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் தேசிய தலைவராக முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக பலமாக உள்ள நிலையில் ஜேடிஎஸ் கட்சி பழைய மைசூர் மாவட்டங்களில் பலமாக இருக்கிறது.

இதனால் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஜேடிஎஸ் கட்சியின் தயவில் தான் ஆட்சியை பிடிப்பார்கள். இத்தகைய சூழலில் ஜேடிஎஸ் முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்கும். இப்படியாக 3 முறை முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி முதல்வராகி உள்ளார்.
கடந்த 2006ல் பாஜக தயவிலும், கடந்த 2018 ல் காங்கிரஸ் உதவியிலும் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டுள்ளார். கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போதும் தொங்கு சட்டசபை உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் ஜேடிஎஸ் கட்சி இருந்தது. ஆனால் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் அங்கு இருக்கும் நிலையில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் அவரது மகன் குமாரசாமி நடத்தும் ஜேடிஎஸ் கட்சி வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்றது. குறிப்பாக ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டு வங்கியான ஒக்கலிகர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பழைய மைசூர் மாவட்டங்களில் ஜேடிஎஸ் கடும் பின்னடைவை சந்தித்தது. இங்கு காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
இதற்கிடையே தான் ஆளும் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் இடையே கடும் வார்த்தை போர் நீடித்து வருகிறது. தேர்தல் வேளையில் காங்கிரஸ் கட்சி பணம், பொருட்கள் கொடுத்து ஜேடிஎஸ் கட்சியை தோற்கடித்துவிட்டதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இது ஒறுபுறம் இருக்க நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன், ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவின.
இதற்கிடையே தான் முன்னாள் முதல்வர் குமாரசாமி கடந்த வாரம் அளித்த பேட்டியில், ‛‛கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப பாஜகவுடன் ஜேடிஎஸ் கட்சி சேர்ந்து செயல்படும்'' என்றார். இவரது இந்த கருத்து என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி ஏற்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் இருந்தது.
இதற்கிடையே தான் டெல்லியில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனையில் ஜேடிஎஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது. இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி அமையுமா? இல்லையா? என்பது பற்றி முன்னாள் பிரதமர் தேவேகவுடா விளக்கமளித்துள்ளார்.

பெங்களூரில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தேவேகவுடா, ‛‛ஜேடிஸெ் கட்சி எப்போதும் மூழ்கிபோகாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியின் உதவியையும் ஜேடிஎஸ் நாடாது. இன்னும் உறுதியாக கூற வேண்டும் என்றால் எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களின் சொந்த பலத்தை வைத்தே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளோம்'' என்றார்.
இதன்மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உள்ளிட்ட எந்த கட்சியுடன் ஜேடிஎஸ் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்பதை தேவேகவுடா உறுதி செய்துள்ளது. இருப்பினும் இன்னும் தேர்தல் நடைபெற 10 மாதங்கள் வரை உள்ளது. மேலும் அரசியலை பொறுத்தமட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் கர்நாடகாவில் ஜேடிஎஸ்-பாஜக கூட்டணி அமையுமா? இல்லாவிட்டால் தேவேகவுடா கூறியது போல் இருக்கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications