சசிகலாவை போல் பெங்களூர் சிறையில் நடிகர் தர்ஷன் சொகுசு வசதி? சிகரெட்டுடன் பரவும் போட்டோ! விசாரணை
பெங்களூர்: நீண்டகால தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய ரசிகரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி சித்ரவதை செய்து கொன்ற வழக்கில் கன்னட நடிகர் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் சசிகலாவை போல் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் தர்ஷன் சிறையில் சிகரெட் பிடிக்கும் போட்டோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரபரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதாவது நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா கவுடாவுக்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசுவாமி என்பவர் ஆபாசமாக மெசேஜ் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பவித்ரா கவுடா அளித்த புகாரில் நடிகர் தர்ஷன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரேணுகாசுவாமியை காரில் கடத்தி வந்து பெங்களூரில் வைத்து சித்ரவதை செய்து கொன்றனர். அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டது. இந்த சம்பவம் ஜூன் 9 ம் தேதி நடந்தது.
கொலையான ரேணுகா சுவாமி நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர். அதாவது தர்ஷன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கு பவித்ரா கவுடா தான் காரணம் என ரேணுகா சுவாமி அவரை திட்டி ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நிலையில் இந்த கொலை என்பது நடந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் தற்போது நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு போட்டோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. அதாவது சிறையில் நடிகர் தர்ஷன் சேர் போட்டு தனது மேலாளரும், பெங்களூர் வில்சன் கார்டன் போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் பெயர் உள்ள நாகராஜூ உள்பட சிலருடன் அமர்ந்துள்ளார். ஒரு கையில் டீ கப் வைத்திருக்கும் அவர் இன்னொரு கையில் சிகரெட் வைத்துள்ளார். இந்த போட்டோ தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதுதொடர்பாக கர்நாடகா சிறைத்துறை டிஜிபி மாலினி கிருஷ்ணமூர்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சமூக வலைதளங்ளில் பரவி வரும் போட்டோவை பார்த்தேன். இந்த போட்டோ உண்மையா என்று முதலில் அறிய வேண்டும். இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். விசாரணைக்காக கூடுதல் ஐஜி ஆனந்த் ரெட்டி மற்றும் சிறைத்துறை டிஐஜி சோமசேகர் ஆகியோர் சிறைக்கு அனுப்பி உள்ளேன். அவர்கள் விசாரணை அறிக்கை தருவார்கள். அப்போது விசாரணையில் தவறு நடந்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பான புகார் என்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இந்த புகார் எழுந்துள்ளது. உதாரணத்துக்கு சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கடந்த 2017 ம் ஆண்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்தபோது சசிகலாவுக்கு விஐபி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாக அப்போதைய சிறைத்துறை ஐஜி ரூபா குற்றம்சாட்டினார். மேலும் சசிகலா பேக்குடன் சிறையில் வலம் வரும் வீடியோக்கள் வெளியாகி இருந்தன. இதுதொடர்பாக அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சசிகலாவை தொடர்ந்து நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான புகார்கள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications