பெங்களூர் கேஆர்புரம்-ஒயிட்பீல்ட் இடையே துவங்கிய மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி பயணம்-உற்சாகம்
பெங்களூர்: கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகா சென்று வரும் நிலையில் இன்று பெங்களூருவில் கேஆர்புரம்-ஒயிட்ஃபீல்ட் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பிரதமர் மோடி பணியாளர்களுடன் ரயிலில் பயணம் செய்து உற்சாகமடைந்தார்.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே நான்கு முனை போட்டி நிலவுகின்றன. கர்நாடகாவில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டவர்கள் தொடர்ந்து கர்நாடகாவுக்கு விசிட் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்தி வருகிறார்.

7 வது முறையாக கர்நாடகா வருகை
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு 6 முறை வந்துள்ளார். பெங்களூரு-மைசூரு தேசிய விரைவுச்சாலை உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்து வருகிறார். இவ்வாறு வரும் பிரதமர் மோடி காரில் நின்றபடி பேரணியாகவும் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் தான் பிரதமர் மோடி 7வது முறையாக இன்று கர்நாடகா சென்றுள்ளார்.

கேஆர்புரம்-ஒயிட்ஃபீல்ட் மெட்ரோ துவக்கம்
அதன்படி தனி விமானத்தில் பெங்களூர் வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சிக்பள்ளாப்பூர் சென்றார். மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைத்த மோடி பெங்களூர் திரும்பினார். இதையடுத்து பெங்களூர் கேஆர் புரம்- ஒயிட்ஃபீல்ட் இடையேயான 13.71 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பயணம் செய்தார்.

வெறும் 24 நிமிட பயணம்
இந்த மெட்ரோ ரயில் பாதை ரூ.4,2250 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. கேஆர்புரம்-ஒயிட்ஃபீல்ட் இடையே சாலை மார்க்கமாக மக்கள் பயணம் செய்ய ஏறக்குறைய ஒருமணி நேரம் ஆகும். ஆனால் தற்போதைய மெட்ரோ சேவையால் கேஆர்புரம்-ஒயிட்ஃபீல்ட் இடையேயான பயண நேரம் வெறும் 24 நிமிடங்களாக குறையும். இதன்மூலம் பயணிகள் அதிகளவில் பயணடைய உள்ளனர்.

2 வகைகளில்
இந்த திட்டம் என்பது பையப்பனஹள்ளி முதல் ஒயிட்ஃபீல்ட் வரையிலான பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பணியின் ஒரு பகுதியாகும். பையப்பனஹள்ளியில் இருந்து 15.81 கிமீ நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் முதற்கட்டமாக 13.71 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ள நிலையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இன்னும் 2.1 கிமீ தூர பணிகள் முடிக்கப்படவில்லை. இதுவும் விரைவில் முடிக்கப்பட உள்ளது. அதாவது பையப்பனஹள்ளியில் இருந்து சீதாராமபாளையம் வரையிலான 8.67 கிமீ நீள பாதை R1A எனவும், சீதாராம பாளையம் முதல் ஒயிட்ஃபீல்டு வரையிலான 7.14 கிமீ நீள பாதை R1B எனவும் அழைக்கப்படுகிறது.

12 மெட்ரோ ரயில் நிலையங்கள்
இந்த மெட்ரோ வழித்தடம் 12 ரயில் நிலையங்களை உள்ளடக்கி உள்ளது. அதன்படி பென்னிகானஹள்ளி, கேஆர் புரம், மகாதேவபுரா, கருடாச்சார்பாளையா, ஹூடி ஜங்ஷன், சீதாராமபாளையம், குண்டலஹள்ளி, நல்லூர்ஹள்ளி, ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, பட்டந்தூர் அக்ரஹாரா (ஐ.டி.பி.எல்.), காடுகோடி மற்றும் சன்னசந்திரா ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications