மசூதியில் அனுமன் மந்திரம்! திரண்டு வந்த இந்துத்துவ அமைப்பினர்! நாளை வரை 144 தடை! பரபர கர்நாடகம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ஜாமியா மசூதியில் அனுமன் மந்திரத்தை இசைத்து பூஜை நடத்த இந்துத்துவ அமைப்பினர் திரண்ட நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நாளை மதியம் 12 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மதம்சார்ந்த் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றனர். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு, கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி மறுப்பு என தொடர்ச்சியாக சர்ச்சைகள் வெடித்தன.
மேலும் மார்க்கெட்டுகளில் இந்து வியாபாரிகளிடம் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும் என தொடர்ச்சியாக இந்துத்துவ அமைப்பினர் பிரசாரம் செய்து வந்தனர்.

தொடரும் சர்ச்சை
இதேபோல் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு போட்டியாக அனுமன் பாடல்கள், அனுமன் மந்திரங்கள் கோவில்களில் இசைக்கப்படும் என இந்துத்துவ அமைப்பினர் கூறினர். இதனால் மகாராஷ்டிரா போல் கர்நாடகத்திலும் பிரச்சனை எழுந்தது. இதையடுத்து ஒலிபெருக்கி பயன்பாட்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவை பின்பற்ற வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியது.

ஜாமியா மசூதி விவகாரம்
இந்நிலையில் தான் கர்நாடகம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனாவில் புகழ்பெற்ற ஜாமியா மசூதி உள்ளது. இந்த மசூதியானது அனுமன் கோவில் இடித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆய்வு நடத்த வேண்டும் என விஷ்வ ஹிந்து அமைப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இதனை முஸ்லிம் அமைப்பினர் மறுத்தனர்.

தடுத்து நிறுத்தம்
மேலும் மசூதியில் ஆய்வு செய்யும் நடவடிக்கையை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் கடந்த சில நாட்களாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் மசூதியில் இன்று அனுமன் மந்திரத்தை ஒலிக்க விட்டு போராட்டம் நடத்துவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் திடீரென்று அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பின்வாங்கவில்லை. இன்று திடீரென்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மசூதியை நோக்கி புறப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளை மதியம் வரை ஊரடங்கு
இதனால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அஸ்வதி ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஊரடங்கு பிறப்பித்தார். இந்த ஊரடங்கானது நாளை மதியம் 12 மணி வரை நடைமுறையில் இருக்கும். மேலும் முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications