கர்நாடகா: தேர்தல் ஆணையத்திற்கு ரியல் சவால்.. போன்பே, கூகுள்பே-வை டார்கெட் செய்த அரசியல் கட்சியினர்
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம்/பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், 'ஆன்லைன் பேமெண்ட்களை' கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக-காங்கிரஸ் இடையே தீவிரமான போட்டி நிலவி வருகிறது. இப்படி இருக்கையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க காவல்துறையினர் மற்றும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த தேர்தலில் டிஜிட்டல் முறையில் 10 முதல் 15 சதவிகிதம் வரை பண பரிவர்த்தனை நடைபெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இதுபோன்ற பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும். தற்போது இதற்கான பணம் அடிமட்ட நிர்வாகிகள் கைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது. இந்த பணம் மளிகை கடைகள், பெட்ரோல் பங்க்குகள், ஒப்பந்ததாரர்கள் போன்றவை மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த இடங்களில் தினசரி பண பரிவர்த்தைனை லட்சக்கணக்கில் இருக்கும். எனவே இதோடு வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டால் சந்தேகம் வராது என்பதால் இந்த முறையை அவர்கள் பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "GPay, PhonePe, Bhim App போன்ற ஆப்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல வாக்கெடுப்புக்கு முந்தையநாள், ரசீதுகள் மற்றும் பரிசு வவுச்சர்களை வழங்கவும் திட்டமிட்டு வருகின்றனர்" என்று கூறியுள்ளார். கர்நாடகா முழுவதும் தினசரி நடைபெறும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த விவரங்கள், இதில் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனை எது? என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு போதிய தொழில்நுட்பம் தேர்தல் ஆணையம் வசம் இல்லாததால் இந்த டிஜிட்டல் பண விநியோகத்தை தடுப்பது தேர்தல் ஆணையத்திற்கு சவாலான ஒன்றாக இருக்கிறது.
இது குறித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா கூறுகையில், "டிஜிட்டல் முறையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நடைமுறையை தடுக்கும் பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். வங்கிகள் மற்றம் ஆன்லைன் பேமென்ட் போர்ட்டல்களை நடத்துபவர்களிடம் பணப்பரிவர்த்தனை விவரங்களை கேட்டிருக்கிறோம். சந்தேகத்திற்கிடமான அளவில் பணப்பரிவர்த்தனை, பெரிய பேமென்ட்களை திடீரென செய்வது, மார்ச் முதல் தீவிரமாக இயங்க தொடங்கியுள்ள அக்கவுண்ட்கள் ஆகியவற்றின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில்தான் நாங்கள் லிஸ்ட்டை கேட்டிருக்கிறோம். இதுபோன்ற கணக்குகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் மாவட்டத்திற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளார். அதேபோல GPay, PhonePe, Airtel Payment, UPI, BHIM போன்ற ஆப்கள் மூலம் பணம் கொடுக்கப்படுவதை தடுப்பது குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) RBI மற்றும் நோடல் வங்கியாளர்கள் சங்கத்துடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது என்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷ் குமார் கூறியுள்ளார். அரசு தரப்பில் இவ்வாறு கூறப்படும் நிலையில் அரசியல் ஆய்வாளர் சந்தீப் சாஸ்திரி வேறு ஒரு விஷயத்தை கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.
அதாவது, "இது முக்கியமான தேர்தல் என்பதால் வாக்குகளை பெற கட்சிகள் தங்கள் பண பரிவர்த்தனையை அதிகரிக்க கூடும். இந்த செயல்பாடுகள் மூலம் கறுப்ப பணம் வெள்ளை பணமாக மாற்றப்படும் அபாயம் எழுந்திருக்கிறது. பெரும்பாலும் கண்களுக்கு தெரியாத வகையில்தான் இந்த பரிவர்த்தனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications