அதிமுக- பாஜக கூட்டணி முறிவா? கர்நாடகா தமிழர்களின் ஆதரவு எடப்பாடிக்கு கிடைக்குமா? வேட்பாளர் பேட்டி
பெங்களூர்: என்னை ஒரு லட்சம் தமிழர்கள் வெற்றி பெற வைப்பார்கள் என கர்நாடகா மாநில சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பரசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் மே 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளது. இதை பாஜகவிடம் சொல்லிய நிலையில் பாஜக வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் அதிமுகவுக்கு தொகுதி ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்த நிலையில்தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக இன்று அமாவாசை தினத்தில் அறிவித்தது. அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி கர்நாடகா மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த தொகுதிக்கு பாஜக சார்பில் முரளி என்பவர் போட்டியிடுகிறார்.
அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவராக உளளார். புலிகேசி நகர் தொகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். கர்நாடகாவில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் பாஜக அங்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. அங்கு பாஜக பொறுப்பாளராக இருப்பவர் அண்ணாமலை. எனவே தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி என கூறி வரும் நிலையில் கர்நாடகாவில் என்ன நிலை என தெரியவில்லை.
இதுகுறித்து வேட்பாளர் அன்பரசன் கூறுகையில், என்னை வேட்பாளராக தேர்வு செய்தமைக்கு கர்நாடகா மாநில அதிமுக செயலாளருக்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகாவில் கூட்டணி அமைத்து போட்டியா இல்லை தனித்து போட்டியா என்பதை கட்சி தலைமை முடிவு செய்து சொல்லும்.

புலிகேசி நகர் தொகுதியில் ஒரு லட்சம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களை நான் நேரில் சந்தித்து பேசினேன். அவர்கள் என்னை வெற்றி பெற வைப்பதாக கூறியுள்ளார்கள். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு எனது பிரச்சாரத்தை தொடங்கிவிடுவேன் என அன்பரசன் தெரிவித்தார். கர்நாடகாவில் வேட்பாளரை தனித்து அறிவித்தது போல் தமிழகத்திலும் அதிமுக தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது.
கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தங்களுக்கு ஒதுக்குங்கள் என எடப்பாடி பழனிசாமி கேட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி விடாமல் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட இந்த மாநில சட்டசபைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications