பெங்களூர் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் மகா சிவராத்திரி விழாவில் நடிகர் ரஜினிகாந்த்
ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஶ்ரீஶ்ரீ ரவி சங்கரின் வாழும் கலை அமைப்பின் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. நாட்டின் சிவாலயங்களில் பக்தர்கள் தங்கி 4 கால பூஜைகளிலும் விடிய விடிய பங்கேற்றனர். இதனையொட்டி சிவாலயங்களில் விடிய விடிய நாட்டியாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. மைசூருவில் திரிநேத்ரேஸ்வரர் கோவிலில் பிரம்மான்டமாக சிவராத்திரி விழா நடைபெற்றது. மைசூர் அரண்மனை வளாகத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. முடுக்குத்துறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், தலக்காடு வைத்தியநாதேஸ்வரர், பஞ்சலிங்க சிவன் கோவில் என புகழ்பெற்ற சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டின.
கோலார் தங்கவயல் கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. மேலும்108 அடி உயர பிரம்மாண்ட சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகமும் நடைபெற்றது.
பெங்களூரில் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருவரும் வாழும் கலை அமைப்பின் சிவராத்தி நிகழ்ச்சியில் பங்கேற்று தியானம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்பட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதில் தம்மான், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத்தில் ஏற்கனவே நடைபெற்றது. தற்போது கர்நாடகா மாநிலம் மங்களூரில் நடைபெற்று வருகிறது. முன்னதாக கர்நாடகா மாநிலம் பெங்களூர் ஆதியோகி மையத்துக்கு ரஜினிகாந்த் அண்ணனுடன் சென்று வழிபாடு நடத்தினர். 112 அடி உயரத்தில் ஆதி யோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.












Click it and Unblock the Notifications