ஈஸி டார்கெட் பெங்களூர்.. தென் மாநிலங்களிலேயே அதிக முறை குண்டு வெடிப்பு.. டைம்லைன் இதோ!
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் இன்று வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒரு பெண், 3 ஊழியர்கள் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் என்ஐஏ விசாரணையை தொடங்கி உள்ளனர். இத்தகைய சூழலில் தான் பெங்களூர் நகரில் கடந்த 2008 முதல் இன்று வரை வெடிகுண்டு வெடித்த சம்பவங்களின் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர் ஒயிட்பீல்ட்டில் உள்ள ப்ரூக்பீல்ட் பகுதியில் ராமேஸ்வரம் கஃபே எனும் பிரபலமான உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் பல துறை பிரபலங்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தான் இன்று மதியம் உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல் உணவுகள் பரிமாறப்பட்டன.

அப்போது திடீரென்று மர்ம பொருள் வெடித்தது. இதில் 3 உணவக ஊழியர்கள், பெண் வாடிக்கையாளர் உள்பட மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர். பிற வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடிவந்தனர்.
ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது என்ன பொருள் என்பது தெரியாமல் இருந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் உணவகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வின் அதிகாரிகளும் ராமேஸ்வரம் கஃபேவுக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சூழலில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெடிகுண்டு வெடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். பின்னணி பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விஷம செயலில் ஈடுபட்டவர் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் இப்படி வெடிகுண்டு வெடிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இதுபோன்று சம்பவம் நடப்பது 4வது முறையாகும். கர்நாடகா பாஜக அலுவலகம் உள்பட பல இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடித்துள்ளதோடு உயிர் பலியும் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2008ம் ஆண்டு, ஜுலை மாதம் 25ம் தேதி பெங்களூரில் தொடர்ந்து 8 குண்டுகள் வெடித்தன. இந்த சக்தி குறைந்த குண்டு வெடித்தது. மடிவாளா, ஆடுகோடி, மைசூர் ரோடு, கோரமங்களா, விட்டல் மல்லையா ரோடு, லாங்க்போர்ட் டவுன், ரிச்மண்ட் டவுன் உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியான நிலையில் 20 பேர் காயமடைந்தனர்.
அதன்பிறகு 2013 ஏப்ரல் மாதம் 17 ம் தேதி பெங்களூரில் குண்டு வெடிப்பு நடந்தது. மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 16 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு நடந்து அதிர்ஷ்டவசமாக யாரும் பலியாகவில்லை. 16 பேர் காயமடைந்தனர்.
2014 டிசம்பர் மாதம் 28 ம் தேதி பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார். பெங்களூரில் சர்ச் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வந்த நிலையில் சக்தி குறைந்த ஐஇடி வகை குண்டு இரவு 8.30 மணியளவில் வெடித்தது. இதில் பவானி என்பவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.
அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூர் நகரில் வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications