மாமியார் செத்துடணும் கடவுளே.. கோயில் உண்டியலில் ரூ.20! டாக்டரிடம் மாத்திரைக்கு போன பெங்களூர் மருமகள்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மாமியார் கொடுமைகள் அதிகம் போல.. நாளுக்கு நாள் வித்தியாசமான சம்பவங்கள் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.. வரதட்சணை கொடுமையால், சமீப காலமாகவே தற்கொலைகளும் அங்கு அதிகரித்துள்ள நிலையில், ஒரு பகீர் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம், கலபுரகி அப்சல்புராவின் கத்தரகா கிராமத்தில் பாக்யவந்தி கோவில் அமைந்துள்ளது. மிகவும் வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாகும். இந்த கோயிலில் வழக்கமாக 4 மாதங்களுக்கு ஒருமுறை, கோயில் உண்டியல் காணிக்கையை எண்ணுவார்கள்.

கோயில் உண்டியல் ரூ.20 நோட்டு
அப்படித்தான் சமீபதில் இங்குள்ள உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.. பக்தர்கள் பலரும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும்படி, கடிதங்கள் எழுதி அந்த உண்டியலில் போட்டிருந்தனர். அதில் 20 ரூபாய் நோட்டு ஒன்று வித்தியாசமாக விழுந்திருந்தது.. அந்த நோட்டை எடுத்து பார்த்தால், "என் மாமியார் சீக்கிரம் இறக்க வேண்டும்" என்று எழுதப்பட்டிருந்தது.
இதை பார்த்து கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த 20 ரூபாய் நோட்டை கொண்டு சென்றனர்.. மாமியாரின் நெருக்கடி தாங்க முடியாத யாரோ ஒருவர், அம்மனுக்கு கோரிக்கையாக எழுதி இந்த 20 ரூபாய் நோட்டை உண்டியலில் காணிக்கையாக போட்டிருந்தது தெரியவந்தது. இதை எழுதிப்போட்டது ஆணா, பெண்ணா என்று தெரியவில்லையாம். இந்த 20 ரூபாய் நோட்டு இணையத்திலும் வைரலாகியிருந்தது.
இப்போது மற்றொரு சம்பவம் இதே கர்நாடகாவில் நடந்துள்ளது.. அதாவது, பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய மாமியாரை கொலை செய்ய வேண்டும் என்று, டாக்டரிடம் மாத்திரைகள் கேட்டாராம்.. இதைக்கேட்டு அதிர்ந்து போன அந்த டாக்டர், உடனடியாக போலீசில் புகார் தந்துள்ளார்.. போலீசாரும் இந்த புகாரின்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்..
மாத்திரைகள் வேண்டும்
பெண்ணின் மீது புகார் தந்த டாக்டர் சுனில் குமார் சொல்லும்போது, "பிப்ரவரி 17ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு, சஹானா என்ற பெண் எனக்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினார்.
அதில், அவர் பெங்களூரிலிருந்து பேசுவதாகவும், தன்னுடைய மாமியாரை கொலை செய்வதற்கு 2 மாத்திரைகள் பரிந்துரைக்குமாறும் என்னிடம் கேட்டார்.. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான், டாக்டர்களின் கடமை உயிர்களை காப்பாற்றுவதுதானே தவிர, உயிரைக் கொல்வது கிடையாது என்று அந்த பெண்ணிடம் சொன்னேன்.
கெஞ்சிக்கேட்ட பெண்
அப்போதும் அந்த பெண், மாத்திரைகளின் பெயர்களை மட்டும் மெசேஜ் அனுப்புங்கள் என்று கெஞ்சினார். நான் அப்போதும் அவரது கோரிக்கையை நிராகரித்தேன். சஹானா தொடர்ந்து எனக்கு பலமுறை செய்திகளை அனுப்பினார். பிறகு இறுதியாக சஹானா என்னிடம் மன்னிப்பு கேட்டார். தன்னைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று கெஞ்சினார். ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்ய நினைக்கிறீர்கள் ? நான் அவரிடம் கேட்டேன்..
அதற்கு அவர், மாமியார் தன்னை அளவுக்கதிகமாக சித்திரவதை செய்வதாகவும், அந்த கொடுமையை இனிமேல் தாங்கி கொள்ள முடியாது என்றும் கூறினார்.. அதனால்தான், இது தொடர்பாக நான் போலீஸில் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினர் விரைவான நடவடிக்கை எடுப்பதாக எனக்கு உறுதியளித்தனர்" என்றார். மாமியாரை கொலை செய்ய மருமகள் மாத்திரைகளை கேட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications