வாரே வா! வார் ரூம் இன்சார்ஜ் சசிகாந்த் செந்தில்! கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு களமிறக்கிய காங்கிரஸ்!
பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தல் வார் ரூம் பொறுப்பாளராக விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியும் காங்கிரஸ் நிர்வாகியுமான சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் ஏற்கனவே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பதால் அவரை நம்பி மிகப்பெரும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளதால் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறது காங்கிரஸ்.

கர்நாடகா தேர்தல்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைத் தேர்தல் 2023-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளதால் இப்போதே களப்பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது காங்கிரஸ். அந்த வகையில் கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் நிறுவப்படவுள்ள வார் ரூம் இன் சார்ஜ் ஆக தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் கர்நாடக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

பல பொறுப்புகள்
கர்நாடகாவில் தக்ஷின கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் துணை ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், துறைச் செயலாளர் என பல பொறுப்புகளை வகித்தவர் சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ். இவர் 2009-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 2019-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். வெறும் 10 ஆண்டுகள் மட்டுமே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியிருந்தாலும் கூட பணிக்காலத்தில் இவர் ஆற்றிய சாதனைகள் ஏராளம். குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தவர் சசிகாந்த் செந்தில்.

காங்கிரஸ் கட்சி
கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சசிகாந்த் செந்தில் அக்கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது செயல்பாடுகள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ராகுல், கர்நாடக சட்டசபைத் தேர்தல் வார் ரூம் இன் சார்ஜ் ஆக நியமித்து பெருமைப்படுத்தியுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் முறைப்படி வெளியிட்டுள்ளார்.

ஆல் ஓவர் சுனில்
224 தொகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் நிர்வாகிகள் சசிகாந்த் செந்திலை தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வகையில் நவீன முறையில் வார் ரூம் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் சுனிலுக்கு கீழ் சசிகாந்த் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ் என தேர்தலுக்கு தேர்தல் சுனில் தனது ஸ்டேரேடர்ஜியை மாற்றிக்கொண்டே செல்வது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications