பெரிய "பாதுகாப்பு குளறுபடி!" காவலரை இடித்துக்கொண்டு பிரதமர் மோடி அருகே வந்த நபர்! கர்நாடகாவில் பரபர
பெங்களூர்: கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கச் சென்றுள்ளார். இதனிடையே பிரதமர் மோடி பேரணியில் பாதுகாப்புப் படை வீரர்களைத் தாண்டி ஒருவர் மிக நெருக்காக வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளத் தீவிரமாக முயன்று வருகிறது.
பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு அங்குப் பொதுமக்களைக் கவர பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதேபோல மத்திய அரசு சார்பிலும் பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா
பல்வேறு தலைவர்களும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கக் கர்நாடகா வந்துள்ளார். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி பேரணியில் அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென பிரதமர் மோடிக்கு அருகே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ பார்க்கும் போது பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வந்த அந்த நபருக்கு சுமார் 15 வயது இருக்கும் என்று தெரிகிறது.

கிட்ட வந்த நபர்
பிரதமர் மோடி காரின் பக்கவாட்டில் நின்றபடி அங்குக் கூடியிருந்த பொதுமக்களைப் பார்த்து கைகளை அசைத்தவாறு வந்தார். அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் பிரதமர் மோடியைக் கண்டு உற்சாகமடைந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், ஒருவர் திடீரென காவலர்கள் மீறி பிரதமர் மோடிக்கு அருகே வந்துவிட்டார். பிரதமரைச் சுற்றிலும் எப்போதும் எஸ்பிஜி எனப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் இருப்பார்கள்.. ஆனால் அவர்களையும் தாண்டி அந்த நபர் பிரதமர் மோடிக்கு மிக அருகே வந்துவிட்டார்.

என்ன நடந்தது
அவர் பிரதமர் மோடியின் மிக அருகே வந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் மாலையை ஏந்திய அந்த நபர் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, பிரதமர் மோடி சென்று கொண்டிருந்த காரை நோக்கி வேகமாக வந்துவிட்டார். அப்போது அங்கிருந்த பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு கடைசி நிமிடத்தில் அவரை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அதற்குள் பிரதமர் மோடி அவரிடம் இருந்த மாலையை வாங்கிக் கொண்டார். பாதுகாப்புப் படையினர் அந்த மாலையை வாங்கி பிரதமரிடம் அளிக்க, அதை வாங்கி அவர் காருக்குள்ளே வைத்தார்.

பாதுகாப்பு
பிரதமர் நரேந்திர மோடி அங்கு வருவதால், அந்த ஒட்டுமொத்த இடமே எஸ்பிஜி கட்டுப்பாட்டிலும் போலீசார் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இருப்பினும், அதையும் தாண்டி இந்த நபர் பிரதமர் மோடிக்கு மிக அருகே வந்துள்ளார். எப்படி அந்த நபர் பிரதமர் மோடிக்கு அவ்வளவு அருகே வந்தார் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. அங்கு ஆயிரக் கணக்கானோர் திரண்டிருந்த நிலையில், அனைவரும் பாதுகாப்பு தடுப்புகளுக்குப் பின்னால் தான் இருந்தனர். ஆனால், இந்த சிறுவன் மட்டும் அனைத்தையும் தாண்டி பிரதமர் மோடிக்கு மிக அருகே சென்றுள்ளார்.

பிரதமர் மோடி
இன்று மாலை 29ஆவது தேசிய இளைஞர் விழாவைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் ரயில்வே விளையாட்டு மைதானம் வரை பேரணியாக வந்தார். எந்த இடத்திற்குச் சென்றாலும் எப்போதும் பிரதமர் மோடிக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.. அதில் கடைசி அடுக்கு பாதுகாப்பு மாநில காவல்துறையின் பொறுப்பாகும். மற்றவை அனைத்தையும் மத்திய அரசே கண்காணித்துக் கொள்ளும்.

பஞ்சாப் பயணம்
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி பேரணியில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாகப் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போதும் இதேபோல பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. கடந்த 2019இல் அவர் பேரணிக்காக ஃபெரோஸ்பூருக்குச் செல்லும் போது, போராட்டக்காரர்கள் வழிமறித்ததால் பிரதமர் மோடி 20 நிமிடங்கள் மேம்பாலத்திலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தவறு பஞ்சாப் அரசு மீது இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications