பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு: குமாரசாமியின் மஜதவில் இருந்து கூண்டோடு ஜூட் விட்ட முஸ்லிம் தலைவர்கள்!
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடம்பெற்றதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து கூண்டோடு முஸ்லிம் தலைவர்கள், தொண்டர்கள் விலகி வருகின்றனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது மதச்சார்பற்ற ஜனதா தளம். அக்கட்சியின் பிரதான வாக்கு வங்கியான ஒக்கலிகா கவுடா வாக்குகள், காங்கிரஸ் கட்சிக்கு போனதுதான் முதன்மை காரணம்.

பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருந்தது மதச்சார்பற்ற ஜனதா தளம். அண்மையில் மகன் நிகிலுடன் டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் குமாரசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச் சார்பற்ற ஜனதா தளம் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் கொந்தளிப்பு: அத்துடன், சட்டசபை தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் தம்மை கைவிட்டுவிட்டனர் எனவும் புலம்பி இருந்தார் குமாரசாமி. பாஜகவுடனான கூட்டணியை நியாயப்படுத்தும் வகையில் குமாரசாமி பேசியது மதச் சார்பற்ற ஜனதா தளத்தில் கணிசமாக இனணந்திருந்த முஸ்லிம் தலைவர்களை கொந்தளிக்க வைத்தது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி மொத்தம் 23 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. ஆனால் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
அடுத்தடுத்து தலைவர்கள் எஸ்கேப்: குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் நபி, மூத்த தலைவர் நசீர் ஹூசைன், மொஹித் அல்ப்தாப் என ஏராளமான தலைவர்கள் விலகுவதாக அறிவித்தனர். அக்கட்சியின் மாநில தலைவரான இப்ராஹிம் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
கூண்டோடு விலகல்: மதச்சார்பற்ற ஜனதா தளம் வலிமையாக உள்ள பகுதிகளில் கூட்டங்களை கூட்டும் முஸ்லிம்கள், கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தும் வருகின்றனர். பாஜகவுடனான கூட்டணியால் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் இழந்து வருகிறது அக்கட்சி தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காங்கிரஸுக்கு தாவல்?: மேலும் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களான சரன்கவுடா கந்தகவுர், கரீம்மா கோபாலகிருஷ்ணா உள்ளிட்ட தலைவர்களும் பாஜகவுடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜகவுடனான கூட்டணியை எதிர்க்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அடுத்ததாக கூண்டோடு காங்கிரஸுக்கு தாவக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications