டூல் கிட் புகார்.. ட்விட்டர் இந்தியாவின் இயக்குனரையே விசாரித்த டெல்லி போலீஸ்? பெரிதாகும் மோதல்!
பெங்களூர்: ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய இயக்குனர் மணீஷ் மகேஸ்வரியை டெல்லி போலீசார் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே 31ம் தேதி இந்த விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையில் தற்போது கடுமையான மோதல் நிலவி வருகிறது. மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை ட்விட்டர் நிறுவனம் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் ட்விட்டர் நிறுவனத்தின் சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி ட்விட்டர் நிறுவனத்தில் வெளியாகும் ட்விட்களுக்காக, அந்த நிறுவனம் மீது வழக்கு தொடுக்க முடியும். உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே ட்விட்டர் நிறுவனம் மீது எப்ஐஆர் பதியப்பட்டு, சம்மனும் அனுப்பப்பட்டுவிட்டது.

ட்விட்டர்
காசியாபாத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக ட்விட்டர் நிறுவனம் மீதும், சில செய்தியாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. காசியாப்பத்தில் கடந்த ஜூன் 5ம் தேதி அப்துல் சமாத் என்ற இஸ்லாமிய முதியவர் சில இளைஞர்கள் தாக்கப்பட்டு, அவரின் தாடி மழிக்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவத்திற்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை, இது மத ரீதியான மோதல் கிடையாது என்று உத்தர பிரதேச போலீஸ் விளக்கம் அளித்தது.

வழக்கு
இதையடுத்தே தற்போது ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தவறான செய்தியை வெளியிட்டு, மத ரீதியான மோதலை தூண்டியதாக ட்விட்டர் நிறுவனம் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இந்த எப்ஐஆர் விவகாரம் ஒரு பக்கம் பெரிதாகி உள்ள நிலையில் இன்னொரு பக்கம் ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய இயக்குனர் மணீஷ் மகேஸ்வரியை டெல்லி போலீசார் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே 31ம் தேதி இந்த விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

டூல் கிட்
காங்கிரஸ் கட்சியின் டூல்கிட் என்று கூறி பாஜகவினர் செய்த ட்விட்களை கடந்த மாதம் ட்விட்டர் நிறுவனம் "டேக்" செய்தது. இந்த டூல் கிட்களை வெளியிட்ட பாஜக தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளில் "Manipulated" டேக் என்ற முத்திரையை டிவிட்டர் நிறுவனம் குத்தியது. பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் இந்த டூல் கிட்டை வெளியிட்டு இருந்தனர். இவர்கள் எல்லோரின் டிவிட்டிலும் "Manipulated" டேக் என்ற முத்திரையை ட்விட்டர் நிறுவனம் குத்தியது.

டேக்
இதையடுத்து டெல்லி அருகே குர்கான் மற்றும் லடோவில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் டெல்லி போலீசார் டூல் கிட் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அங்கு சம்மனும் அளித்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய இயக்குனர் மணீஷ் மகேஸ்வரியை விசாரணை செய்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications