ஆட்டோ டிரைவரிடம் கன்னடத்தில் பேரம் பேசி பணத்தை குறைத்த AI.. கைகொடுத்த சாட் ஜிபிடி - சுவாரசியம்
பெங்களூர்: கன்னட மொழி தெரியாததால் கல்லூரி மாணவர் ஒருவர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்டோ டிரைவரிடம் பேரம் பேசி கட்டணத்தை குறைத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கர்நாடகா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக பெங்களூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கன்னட மொழி பேசுவது என்பது சிரமமான ஒன்றாக உள்ளது.

பெங்களூரில் சில ஆண்டுகள் தங்கியிருப்போர் கன்னடம் பேச கற்றுக்கொள்கின்றனர். ஆனால் பெங்களூருவுக்கு புதிதாக வேலைக்கு செல்வோர், படிப்புக்கு செல்வோருக்கு கன்னட மொழி பேசுவதும், மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதும் சற்று சிரமமான ஒன்றாகவே உள்ளது.
இந்நிலையில் தான் கன்னடம் மொழி தெரியாத கல்லூரி மாணவர் ஒருவர் ஆட்டோ டிரைவரிடம் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி பேரம் பேசி கட்டணத்தை குறைத்துள்ளார். அதாவது பெங்களூரில் வசித்து வருபவர் சஜன் மஹ்தோ. இவர் மாணவராக இருக்கிறார். இவர் தான் சாட்ஜிபிடியின் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்டோ டிரைவரிடம் கன்னடத்தில் பேசி கட்டணத்தை குறைத்துள்ளார்.
அதாவது சாட் ஜிபிடியில் வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சத்தை சஜன் மஹ்தோ பயன்படுத்தினார். அதன்பிறகு அவர்,‛‛ஹாய் சாட் ஜிபிடி. பெங்களூரில் ஆட்டோ டிரைவரிடம் பேரம் பேச எனக்கு உதவி செய்ய வேண்டும். ஆட்டோ பயணத்துக்கு டிரைவர் என்னிடம் ரூ.200 கேட்கிறார். ஆனால் நான் தினமும் இந்த ரூட்டில் பயணிக்கிறேன். மாணவராக இருக்கிறேன். சவாரிக்கு ரூ.100 மட்டும் கொடுக்க நினைக்கிறேன். அவரிடம் பணிவோடு பேச வேண்டும். என் அண்ணன் போல் நினைத்து பேரம் பேசுங்கள்'' என்று கூறினார்.
இதையடுத்து அவர் தனது செல்போனை ஆட்டோ டிரைவரிடம் வழங்கினார். அப்போது, ஏஐ தொழில்நுட்பம் மூலம், ‛‛அண்ணா.. நமஸ்காரா.. இவர் மாணவர். தினமும் இந்த ரூட்டில் பயணம் செய்கிறார். தயவு செய்து கட்டணத்தை கொஞ்சம் குறைக்கிறீர்களா. அவர் ரூ.100யை கட்டணமாக வழங்க நினைக்கிறார். தினமும் வரும் பயணி என்று நினைத்து கொண்டு கட்டணத்தை குறையுங்கள்'' என்று கன்னட மொழியில் ஆட்டோ டிரைவரிடம் கூறியது. அதற்கு ஆட்டோ டிரைவர், ‛‛இல்லை இல்லை.. ரூ.150 சொல்லி இருக்கிறேன். இன்னும் ரூ.30 குறைக்கலாம். ரூ.120யை விட குறைக்க முடியாது'' என்று கூறினார்.
இதையடுத்து சாட் ஜிபிடி, ‛‛ரூ.120 is Fine'' என்று கூறியது. ஆட்டோ டிரைவரும் ரூ.120க்கு சவாரிக்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்த மாணவர் ஆட்டோவில் ஏறி பயணித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பலரும் இந்த வசதியை வரவேற்றுள்ளனர். மொழி தெரியாத பிரச்சனையை சாட் ஜிபிடி மூலம் தீர்க்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications