பெங்களூர் தண்ணீர் பஞ்சம்.. குடிநீரை வீணாக்கியவர்களுக்கு 5.60 லட்சம் அபராதம் விதித்த குடிநீர் வாரியம்
பெங்களூர்: கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் குடிநீர்ப் பிரச்சனையை சமாளிப்பதற்காக கடும் கட்டுப்பாடுகளை பெங்களூர் குடிநீர் வாரியம் விதித்துள்ளது. இந்நிலையில், விதிகளை மீறி குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு குடிநீர் வாரியம் சார்பில் ரூ. 5.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைக்கிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களை கடப்பதை நினைத்தாலே கண்ணைக் கட்டுகிறது. கடலோரப் பிரதேசங்கள், சென்னை, வேலூர் போன்ற பகுதிகள்தான் வெயிலுக்கு பெயர்பெற்ற மாவட்டங்களாக இருந்தன. தற்போது கோவை, நீலகிரி, பெங்களூர் போன்ற பகுதிகள் கூட சுட்டெரிக்கும் வெயிலால் பாதிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக கோடைக் காலத்தில் பொதுமக்களுக்கு பிரதான பிரச்சனையாக இருப்பதே குடிநீர் தட்டுப்பாடு தான். கடும் வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஒவ்வொரு பகுதியிலும் முக்கியப் பிரச்சனையாக மாறி வருகிறது. கோடைக் காலம் துவங்குவதற்கு முன்னரே அதிகளவில் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், குடிநீரை வீணாக்கக் கூடாது என்று பெங்களூர் குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரிலும் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், கோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக பெங்களூர் குடிநீர் வாரியம் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெயில் காலம் வருவதால் பொதுமக்கள் குடிநீர் தொடர்பான கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் பெங்களூர் குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை தண்ணீரைக் கொண்டு கழுவ கூடாது. வீடு, அலுவலகங்களில் உள்ள தோட்டங்களை பராமரிப்பதற்கு, கட்டுமானப் பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த கூடாது. நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்ப குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறையை மீறி செயல்பட்டால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். அதனையும் மீறி மீண்டும் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கூடுதலாக ரூ. 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் பொதுமக்கள் 112 பேர் குடிநீரை வீணாக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு ரூ.5.60 லட்சம் தொகையை பெங்களூர் குடிநீர் வாரியம் அபராதமாக விதித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்கக் கூடாது. மீறி குடிநீரை வீணாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக் காலத்தின்போது கடந்த ஆண்டிலும் இதேபோல குடிநீரை வீணாக்கும் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பெங்களூரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications