‛பாபர் மசூதி போல் பட்கல் மசூதியை இடிப்போம்’..பாஜக எம்பி ஹெக்டே சர்ச்சை.. உடனே பாய்ந்த ‛‛ஆக்க்ஷன்’’
பெங்களூர்: ‛‛உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி இடித்ததுபோல் பட்கல் மசூதியையும் இடித்து தள்ளுவோம்'' என சர்ச்சையாக பேசிய பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே மீது கர்நாடகா போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக யாரும் புகார் அளிக்காத நிலையில் போலீசார் தாமாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் செயல்பட்டு வருகின்றனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கர்நாடகாவில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

காங்கிரஸ் கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெற வைக்க இவர்கள் 2 பேரும் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
அதேபோல் பாஜகவினரும் அங்கு நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். தற்போது எம்பிக்களாக உள்ளவர்கள் தங்களின் தொகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும், உத்தர கன்னடா தொகுதியின் எம்பியுமான அனந்த்குமார் ஹெக்டே அங்கு நடந்த நிகழ்ச்சியில் நேற்று பேசியது பெரும் சர்ச்சையானது. சர்ச்சைக்கு பெயர் பெற்ற இவர் அந்த தொகுதியில் இருந்து 6வது முறையாக எம்பியாக உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் முதல் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த நிலையில் தற்போது வரும் தேர்தலிலும் அவர் மீண்டும் களமிறங்க காய் நகர்த்தி வருகிறார்.
‛‛இந்த சாபம் தான் காரணம்’’.. இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மரணம் குறித்து பாஜக எம்பி ஹேக்டே சர்ச்சை
உத்தர கன்னடா மாவட்டத்தில் பட்கல் என்ற பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில் தான் பட்கல் குறித்து அவர் சர்ச்சையாக பேசினார். இதுதொடர்பாக அவர், ‛‛பாபர் மசூதியை போல் பட்கல் நகரில் உள்ள மசூதிக்கும் ஏற்படும். இது எனது முடிவு அல்ல. இந்து சமுதாயத்தின் முடிவு. இதை அச்சுறுத்தல் என்று கூட நீங்கள் எடுத்து கொள்ளலாம்.
மேலும் சிரசி சிபி பஜார் பகுதியில் ஒரு மசூதி உள்ளது. இதற்கு முன்பு அந்த இடத்தில் விஜய விட்டல் கோவில் இருந்தது. எங்களுக்கு எதிரி என்பது காங்கிரஸ் இல்லை. சிலரது மனநிலை தான்'' என கூறியிருந்தார். அனந்த்குமார் ஹெக்டேவின் இந்த பேச்சு என்பது தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது அனந்த்குமார் ஹெக்டே மீது கர்நாடகா மாநில போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக யாரும் புகார் அளிக்காத நிலையிலும் குமட்டா போலீசார் தாமாக முன்வந்து (Suo Moto) வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரிவு 153ஏ (இருதரப்பினர் இடையே மதம், இனம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பகையை தூண்டுதல்) என்பதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கார்வார் எஸ்பி விஷ்ணுவர்ஷன் கூறுகையில், ‛‛அனந்தகுமார் ஹேக்டேவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு என்பது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியது மற்றும் மாவட்டத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பது என்ற அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.












Click it and Unblock the Notifications