ஆசையோடு தேஜஸ்வி சூர்யா சொன்ன ஒற்றை வார்த்தை! கார்த்தி சிதம்பரத்துக்கு வந்ததே கோபம்! பதிலடி-மோதல்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவின் இளைஞர் அணியின் தேசிய தலைவரும், பெங்களூர் தெற்கு எம்பியுமான தேஜஸ்வி சூர்யா ஆசையாக ஒரு வார்த்தை கூற உடனடியாக சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்தார். இதையடுத்து தற்போது ட்விட்டரில் கருத்து மோதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணமான தேஜஸ்வி சூர்யா, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முதலில் பதிவிட்டது என்ன? என்பது பற்றிய தகவல் வருமாறு:
கர்நாடகாவில் கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. முதலில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தற்போது பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் தான் தற்போதைய கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதி முடிவடைய உள்ளது. நேற்று கர்நாடகா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடத்தி மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தா்ர.

நடத்தை விதிமுறைகள் அமல்
முன்னதாக ஏப்ரல் 13ம் தேதி வேட்புமனுத்தாக்கல் துவங்கி ஏப்ரல் 20ம் தேதி நடக்கும். ஏப்ரல் 21ல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் நிலையில் மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 24 கடைசி நாளாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பால் கர்நாடகாவில் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

தனி மெஜாரிட்டி பெற வியூகம்
கடந்த 2018 தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்து கவிழ்ந்த நிலையில் பாஜக அதிகாரத்தை கைப்பற்றியது. இதனால் கர்நாடகாவில் சில அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் தான் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் செல்வாக்கை நிரூபித்து முதல்வராக வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளும் செயல்பட தொடங்கி உள்ளன. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக வியூகங்களை வகுத்து வருகின்றன.

மேஜிக் நம்பராக 113
கர்நாடகவை பொறுத்தமட்டில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தனி மெஜாரிட்டி பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட அந்த கட்சி 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த மேஜிக் நம்பரை நோக்கி தான் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியிகள் காய்நகர்த்தி வருகின்றன. இதற்காக வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளவர்களை வேட்பாளர்களை கட்சிகள் களமிறக்கி வருகின்றன. ஜேடிஎஸ் சார்பில் 93 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் சார்பில் 124 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக சார்பில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் அனைத்து கட்சிகளும் முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது.

தேஜஸ்வி சூர்யாவுக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி
இதற்கிடையே கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது முதல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மேலும் கர்நாடகா அரசியல் களநிலவரம் பற்றி பலரும் அறிய ஆர்வமாகி உள்ளன. இதனால் தான் சமூக வலைதளமான ட்விட்டரில் கர்நாடகா சட்டசபை தேர்தல் 2023 எனும் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. இதற்கிடையே தான் ட்விட்டரில் பாஜக இளைஞரணி தேசிய தலைவரும் பெங்களூர் தெற்கு தொகுதி எம்பியுமான தேஜஸ்வி சூர்யா மற்றும் தமிழ்நாடு சிவகங்கை தொகுதி எம்பியான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

என்ன பதிவிட்டனர்?
அதாவது நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛மே 13, 2023, பாஜக மலரும். கர்நாடகாவிலும் வெற்றி பெறுவோம்'' என தெரிவித்து இருந்தார். அதாவது கர்நாடகா தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாளை குறிப்பிட்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதை தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார். இதை பார்த்த கார்த்தி ப சிதம்பரம், ‛‛தேஜஸ்வி சூர்யா, இந்த ட்விட்டை சேமித்து வைத்து கொள்ளுங்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்கும்'' என பதிலடி கொடுத்துள்ளார்.

தொடரும் மோதல்
இதையடுத்து காங்கிரஸ், பாஜகவினர் தற்போது கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா சார்ந்த கருத்து கணிப்பு முடிவுகள், ஊழல் உள்ளிட்ட விஷயங்களை பதிவிட்டு பாஜகவினர் காங்கிரஸையும், காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினரையும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் நேற்று முதல் இன்று வரை இருகட்சியினர் இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications