ஓயாத சர்ச்சை.. மசூதிகளை இடித்து கோவில்கள் கட்டுவோம்! பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவால் பரபரக்கும் கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் மதம்சார்ந்து சிலர் பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான கேஎஸ் ஈஸ்வரப்பா பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் பாஜக மூத்த தலைவராக இருப்பவர் கேஎஸ் ஈஸ்வரப்பா. சர்ச்சைக்கு பெயர் பெற்ற இவர் முன்னாள் அமைச்சராவார். மேலும் கர்நாடகாவின் முந்தைய முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் இவர் அமைச்சராக இருந்தார்.

அப்போது அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்தார். அரசு பணிகளை முடித்து அதற்கான பணம் கேட்டபோது ஈஸ்வரப்பா கமிஷன் கேட்டார். இதனால் தற்கொலை செய்வதாக ஒப்பந்ததாரர் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு ஈஸ்வரப்பா சிவமொக்கா தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் இவருக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில் தான் ஈஸ்வரப்பா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதாவது நேற்று ஹாவேரி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் ஈஸ்வரப்பா பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‛‛காங்கிரஸ் கட்சி இந்து மதத்தை வெறுக்கிறது. முஸ்லிம்களை அவர்கள் ஒரு பெரிய குடும்பம்போல் நினைக்கிறார்கள். முஸ்லிம்கள் இல்லாவிட்டால் காங்கிரஸ் அழிந்திருக்கும். முஸ்லிம்களால் கர்நாடகாவில் காங்கிரஸ் இன்னும் இருக்கிறது.
முகலாயர்கள் ஆட்சியில் கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டன. இவ்வாறு கட்டப்பட்ட மசூதிகள் இடிக்கப்பட்டு மீண்டும் அந்த இடத்தில் கோவில்கள் கட்டப்படும்'' என தெரிவித்தார். இதுதான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இவர் முஸ்லிம் மக்கள் குறித்து சர்ச்சையாக பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவர் கூறிய கருத்துகள் கடும் எதிர்ப்பு உள்ளாகி உள்ளன.
சமீபத்தில் அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தல் சமயத்திலும் இவர் பேசிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது அவர், ‛‛அசான் (மசூதியின் அழைப்பு ஓசை) இசைக்கப்படும்போது தலைவலி ஏற்படுகிறது'' என கூறி விவாதத்தை கிளப்பி இருந்தார். இந்நிலையில் தான் தற்போது மசூதிகளை இடித்து கோவில்கள் கட்டப்படும் என மீண்டும் அவர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications