பெங்களூர் டூ கொல்கத்தா ரயில் டிக்கெட் விலை 10,000 ரூபாய்.. வாயை பிளக்க வைத்த கட்டணம்
பெங்களூர்: பெங்களூரில் இருந்து கொல்கத்தாவிற்கு ரயிலில் 2ம் வகுப்பு ஏசி பெட்டியில் செல்ல, பிரீமியம் தட்கலில் டிக்கெட் கட்டணம் 10,000 ரூபாய் என்று நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆகஸ்ட் 9ம் தேதியான இன்றைக்கு நெட்டிசன் ஒருவர் ஐஆர்சிடிசியில் இன்று காலை 11 மணிக்கு புக்கிங் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது தான் இந்த டிக்கெட் கட்டணத்தை பார்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
ரயில்களின் மக்கள் அதிகம் விரும்பு முக்கிய ரயில்களுக்கு மூன்று மாதம் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது தான் எதார்த்தமாகும். சில சமயங்களில் நான்கு மாதங்கள் முன்பு புக்கிங் செய்தால் தான் டிக்கெட் உறுதியாக கிடைக்கும் . ஐஆர்சிடிசி இணையதளத்தில் சென்னை டூ திருநெல்வேலி, சென்னை டூ மதுரை , சென்னை டூ கோவை போன்ற ரயில்களில் வெள்ளிக்கிழமைகளில் டிக்கெட் முன்பதிவு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல.
அதேபோல் தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம், ஆயுத பூஜை உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் டிக்கெட் புக்கிங் என்பது தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்துவிடும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் செல்லும் முக்கிய ரயில்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான்.

வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் டிக்கெட் கிடைக்குமா என்றால், அதுவே ஈஸி இல்லை.. குறிப்பாக சொல்வது என்றால், கடைசி நேரத்தில் அல்லது கடைசி வாரத்தில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து போகவே முடியாது. அது தான் எதார்த்தமாக உள்ளது. இப்படி கடைசி நேரத்தில், ரயிலில் பயணிக்க விரும்புவோருக்காக தட்கல் புக்கிங் இருக்கிறது.
ஆனால் தட்கலில் முக்கியமான விடுமுறை நாட்களில் முன்பதிவு செய்யவே முடியாது. அந்த அளவிற்கு ஐஆர்சிடிசி தளம் சுற்றும். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்ய முயற்சிப்பதால் பலருக்கு பேமெண்ட் முறையில் லோடு ஆகி கடைசியில் எரர் என்று வந்துவிடும். இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள். வெகுசிலருக்கு தட்கலில் டிக்கெட் கிடைக்கிறது.

இந்த சூழலில் ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல், தட்கலிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் எப்படியாவது சொந்த ஊருக்கு அல்லது, தங்கள் போக விரும்பும் இடத்திற்கு போக வேண்டும் என்று ஆம்னி பேருந்துகளையோ அல்லது விமானத்தையே நாடுகிறார்கள். அவர்களை குறிவைத்து ரயில்வே ஐஆர்சிடிசியில் பிரீமியம் தட்கல் புக்கிங் வைத்திருக்கிறது.
இது எப்படி என்றால் , குறிப்பிட்ட ரூட்டில் விமானத்தில் செல்ல அதிகம் பேர் விரும்புகிறார்கள் என்றால் டிக்கெட் விலையை சர்வ சாதாரணமாக 10000, 20000 என்று வைப்பார்கள். பொங்கல், தீபாவளி மற்றும் சுபமுகூர்த்த நாட்கள், வாரஇறுதி நாட்களில் இதுபோல் விலை கடுயைமாக இருக்கும். அதேநேரம் யாரும் முன்பதிவு செய்யவில்லை.. அல்லது குறைவான நபர்களே ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால் டிக்கெட் விலை சாதாரணமாகவே இருக்கும்.
அதேபோன்ற மாடலை ஐஆர்சிடிசி இணையதளம் பின்பற்றுகிறது. அதனால் பிரீமியம் தட்கலில் டிக்கெட் கட்டணம் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக இருக்கும். ஆனால் கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து கொல்கத்தாவிற்கு இன்று ரயில் டிக்கெட் கட்டணம் பிரீமியம் தட்கலில் 10000 என்று இருந்தாம்.
இதுபற்றி ரெட்டிட் தளத்தில் ஒருவர் ஸ்கிரீன் ஷாட் ஷேர் செய்துள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவிற்கு ரயில் டிக்கெட் கட்டணம் 2ம்வகுப்பு ஏசி பெட்டிக்கு வழக்கமாக 2900 ஆக இருக்கும். இப்போது 10000 என்று காட்டுகிறது. நிச்சயம் இந்த கட்டணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்து நான் போக மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், குறைந்த கட்டணத்தில் விமானத்திலேயே பயணிக்க தாராளமாக டிக்கெட் கிடைக்கும் போது, ரயிலில் இந்த கட்டணத்தில் எதற்காக போக வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் மருத்துவ காரணங்களால்விமானத்தில் பறக்க முடியாத நிலையில் உள்ளார்கள் என்றும், நடந்து கூட செல்ல முடியாதவர்களாக சிலர் இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு இந்த கட்டணம் பெரும் சுமையாக இருக்கும் என்று நெட்டிசன் ஒருவர் கூறினார்.












Click it and Unblock the Notifications