தக் லைப்.. உச்சநீதிமன்றம் போட்டபோடு.. சட்டென பணிந்த கன்னட அமைப்பு! பிரவீன் ஷெட்டி சொன்னதை பாருங்க
பெங்களூர்: தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று கூறியதால் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் திரைப்படத்துக்கு தடை போட முடியாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு தொடர்பாக கர்நாடகா ரக்ஷண வேதிகே (கரவே) தலைவர் பிரவீன் ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகவில்லை. படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். அப்போது ‛‛தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்'' என்று கமல்ஹாசன் பேசினார். இதற்கு கன்னட அமைப்பினர், கர்நாடகா திரைப்பட வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் தான் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும். இல்லாவிட்டால் ரிலீஸ் ஆகாது என்று அறிவித்தனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இதனால் கர்நாடகாவில் இந்த திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. திரைப்படத்தை போலீஸ் பாதுகாப்புடன் வெளியிட வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தை கமல்ஹாசன் நாடினார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றதை நாடியது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி கமல்ஹாசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினார். இதனால் படம் வெளியாக அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து கமல்ஹாசன் உச்சநீதிமன்றம் சென்றார். நேற்று உச்சநீதிமன்றம் மனுவை விசாரித்தது.
அப்போது, "கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். குண்டர்கள், கும்பல்கள் நமது வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது. உரிய சான்றிதழ் பெற்ற பின் ஒரு திரைப்படத்தை வெளியிட எல்லாருக்கும் உரிமை உண்டு. அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு அது வேண்டுமா, வேண்டாமா என மக்கள் முடிவு செய்யட்டும்; திரைப்படத்தை வெளியிடுவதை தடை செய்ய முடியாது'' என்று கூறியது.
இதனால் தக் லைஃப் படக்குழு மற்றும் கமல்ஹாசன் தரப்பு மகிழ்ச்சியில் உள்ளது. இந்நிலையில் தான் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக கர்நாடகா ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛ஆர்டி நகர் போலீசார் எனக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். திரைப்படம் வெளியிடும்போது நாங்கள் போராட்டம் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. படத்தை தடுக்க இன்னும் நாங்கள் செல்லவில்லை. தக் லைஃப் சினிமா தமிழகத்தில் ஓடவில்லை. மக்கள் அந்த படத்தை புறக்கணித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் தியேட்டரில் ரிலீஸ் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தை ரிலீஸ் செய்கிறார்களா? படத்தை மக்கள் பார்க்கிறார்கள்? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதை மக்களிடமே நாங்கள் விட்டு விடுகிறோம். கன்னட மொழி குறித்து சர்ச்சையாக பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க ஆர்டி நகர் போலீசில் புகாரளித்தேன். ஆனால் போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை.
ஆனால் நேற்று இரவு 9 மணியளவில் போலீசார் என் வீட்டுக்கு வந்தனர். கதவு அருகே நின்றனர். இன்று காலையில் வாக்கிங் போகவிடாமல் தடுத்தனர். கன்னட போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகள் இல்லை. தேசதுரோகிகள் இல்லை. தீவைப்பவர்கள் இல்லை. கர்நாடகாவுக்காக, கர்நாடகா மக்களுக்கான, கன்னட மொழிக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தி போலீசாரிடம் லத்தி சார்ஜ் வாங்கியிருக்கிறேன். இந்த வேளையில் வீட்டுக்கு வந்து கதவு பக்கத்தில் போலீசார் நிற்பதை தீவிரமாக கண்டிக்கிறேன்.
சினிமா விஷயத்தில் நாங்கள் யாரும் போராட்டம் செய்யல்லை. கன்னட மொழி பற்றிய கமல்ஹாசனின் கருத்தை கண்டித்து தான் போராட்டத்தை தொடங்கினோம். சினிமா தடைப்பட்டது. இப்போது மக்களே அந்த சினிமாவை புறக்கணித்துள்ளனர். இந்த சினிமாவை முடிந்துபோன அத்தியாயம். கன்னட மக்கள் பார்க்க இன்னும் முடிவு செய்யவில்லை. படத்தை வெளியிடவும் யாரும் இன்னும் முன்வரவில்லை.
கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று அவர் கூறியது கர்நாடகா மக்களின் உணர்வுகளை புண்படுத்தியது. இதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினோம். கர்நாடகா உயர்நீதிமன்றம் சொன்னது போல் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இது சின்ன விஷயம். ஆனால் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். நீதிமன்றம் சினிமாவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்'' என்று கூறினார். முன்னதாக இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட பிற கன்னட அமைப்பினர் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது உச்சநீதிமன்ற உத்தரவால் அவர்கள் மனம் மாறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications